மேலும்

நாடாளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்படவில்லை – ஊடகங்கள் ஏமாற்றம்

sri lanka parliamentசிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நேற்று நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிடலாம் என்று கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், சிறிலங்கா அதிபர், அதற்கான உத்தரவை நேற்று பிறப்பிக்கவில்லை.

அதேவேளை, நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பாக ஆராயப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்று நடந்த நாடாளுமன்ற அமர்வில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச, நாளை நாடாளுமன்றம் இருந்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிப்பார் என்று கூறியிருந்தார்.

அதேவேளை, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ‘நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்று தெரியாது. சில நாட்களிலும் கலைக்கப்படலாம், சில மணிநேரங்களிலும் கலைக்கப்படலாம். அது அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையில் உள்ளது ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் அது இடம்பெறும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *