மேலும்

மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டமாகத் தெரிவிப்பு

mahinda-maithriநாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

சுசில் பிரேம் ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, குமார வெல்கம, ரி.பி.எக்கநாயக்க, டிலான் பெரேரா,  ஜோன் செனிவிரத்ன ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு, தனது முதலாவது கூட்டத்தை, செவ்வாய்க்கிழமை இரவு ஜோன் செனிவிரத்னவின் கொழும்பு இல்லத்தில் நடத்தியிருந்தது.

மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் திட்டம் எதையும் முன்வைக்கக் கூடாது என்று தமக்கு வழங்கப்பட்ட செய்தி தொடர்பாக அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை என்ற தனது முடிவை, மகிந்த ராஜபக்சவுக்கு குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் மைத்திரிபால சிறிசேன தெரியப்படுத்தியுள்ளார்.

அதே குடும்ப உறுப்பினர் மூலம், சிறிலங்கா அதிபருக்கு, மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ள செய்தியில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை நிறுத்தாவிட்டால், தனியான அணியாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பக்கபலமாக நின்றவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால், ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து விசனமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு பகுதியில் அவசரமாக கூடி ஆராய்ந்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை மீளக் கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனால் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாத கடுமையான அழுத்தங்களுக்கு மைத்திரிபால சிறிசேன முகம் கொடுத்துள்ளார்.

அதேவேளை, தேர்தலில் போட்டியிடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று மகிந்த ராஜபக்சவுக்கு மைத்திரிபால சிறிசேன தெரியப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *