மேலும்

வித்தியா வழக்கிற்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா? – கேள்வி எழுப்புகிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

suresh_premachandranபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது தொடர்பாக,  தமிழர் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலைச் செய்யபட்ட கோர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அதேசமயம் அவ்விடயத்தில் சட்டத்தின் முன்மாதிரி சரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகின்றது.

குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், அவர்கள் தப்பிக்கவே இடமளிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கு என்ற பேரில், எமது தமிழ்ப் பேசும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட – அவர்கள் மீது அநீதியான வகையில் கொடூரமான விதத்தில், தென்னிலங்கை ஆட்சியாளர்களால் பலவந்தமாகத் திணிக்கப்பட்டு, இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் மீது 37 ஆண்டுகளுக்கு மேலாக ஏவிவிடப்பட்டிருக்கும் – பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு கையில் எடுப்பதைப் பார்த்திருப்பதா என்ற கேள்வி நம் மத்தியில் எழுந்திருக்கின்றது.

இந்தச் சட்டத்தை இந்த விடயத்தில் அரசு கையில் எடுப்பதை பார்த்திருப்பது – அனுமதித்து வாளாவிருப்பது – எதிர்காலத்தில் பல தவறான விடயங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மாதிரியாக இது மாறிவிடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அத்தோடு கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக தமிழர்கள் மீது கோரமான – கொடூரமான – மனிதாபிமானமற்ற – வகையிலும், நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாகவும் ஏவி விடப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தமிழ்ச் சமூகம் இன்று ஏற்று, அங்கீகரிப்பதாகவும் இந்த மௌனம் அர்த்தப்படுத்தி விடக்கூடும்.

புலன்விசாரணைகள் பூர்த்தியாகாத விடயத்தில் விசேட ஏற்பாடுகளின் கீழ் சந்தேக நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கும் விசேட உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்க முடியும்.

அதற்கு சாதாரண சட்டத்தில் இடமுண்டு. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம்தான் அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதல்ல.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தடுத்து வைத்தல், விசாரித்தல் போன்ற விடயங்களை முன்னெடுப்பதற்கு முதலில் ‘பயங்கரவாதம்’ என்று வர்ணிக்கப்படும் விடயம் இருக்க வேண்டும்.

காமுகர்கள் கூட்டத்தின் காமுக வேலைகளையும் படுகொலைகளையும் ‘பயங்கரவாதம்’ என்று அர்த்தப்படுத்தி, நீதி முறையற்ற சட்டங்களை ஏவுவதற்கு அனுமதிப்பது சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்கிவிடும்.

பிற்காலத்தில் பிழையான நடைமுறைகளுக்கு அது வழிகாட்டி விடலாம். தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் ‘பாதாள உலகத்தின்’ நடவடிக்கைகளை பயங்கரவாதச் சட்டம் மூலம் கையாள முன்வராத நிலையில் இந்த விடயத்தில் மட்டும் அதனை அரசு கையில் எடுப்பது அரசியல் ரீதியில் நமக்கு ஒலிக்கப்படும் அபாயச் சங்காகும்.

கொக்கரிக்கும் பேரினவாதக் கும்பல்களை அடக்கவும், சிறுபான்மையினரின் மதங்களையும் மத நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி, சிறுமைப்படுத்தும் திட்டமிடப்பட்ட மேலாதிக்க நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாடாத அரசு, வடக்கில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு மட்டும் இந்த வகையில் நடந்து கொள்வது பலத்த சந்தேகத்தை தருவதாகவும் இருக்கின்றது.

நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தகர்ந்தெறிந்து உருவாக்கப்பட்டதே பயங்கரவாதத் தடைச் சட்டமாகும்.

அதனால் இலங்கை உட்பட உலகின் எந்த நாட்டிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் ஆகக்கூடிய தண்டனை நீண்ட சிறைவாசம் அல்லது ஆயுள் தண்டனைதான். மரணதண்டனை வழங்கப்பட இடமேயில்லை.

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் அதுதான் நிலைமை.

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நடைமுறை வரலாற்றில் ஒரே ஒரு தடவைதான் மரணதண்டனை விதிப்பதற்கு நேர்ந்தது. அது, குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு எதிரான கான்ஸ்டபிள் சிவநேசன் கொலை வழக்காகும்.

அந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருக்கவில்லை. அதனால் அந்தக் கொலை வழக்கின் குற்றப் பத்திரம் சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் குட்டிமணி, தங்கத்துரை, கறுப்பன் போன்றோர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்ட சமயத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைக்கு வர முந்திய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் அந்தச் சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்று அச்சட்டம் கூறுவதன் அடிப்படையில் அந்த வழக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது.

அந்தச் சட்டத்தின் கொடூர – அநீதியான – நடைமுறைகளுக்கு அமைய குட்டிமணியும், ஜெகனும் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். எனினும் மற்றொரு எதிரியான கறுப்பன் விடுக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்ட குட்டிமணிக்கும், ஜெகனுக்கும் அவர்களுக்கு அந்த வழக்கில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தவிர பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மரணதண்டனை வழங்கப்பட்ட சரித்திரம் இலங்கையில் இல்லை; அதற்கான சட்ட வாய்ப்பும் இல்லை.

ஆகவே, இந்த விடயத்தில் அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கையில் எடுத்திருப்பதால் அதன் கீழேயே வழக்கு விசாரிக்கப்படும் சூழலும், அதனால் ஆகக்கூடிய பட்ச தண்டனையான மரணதண்டனையிலிருந்து இக்கொடூரத்தைப் புரிந்தவர்கள் தப்பவும் கூட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் கடந்த தவணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கவில்லை.

அதனால் இந்த விடயத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்வதை சட்டரீதியாக ஆட்சேபிக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என சந்தேக நபர்களினால் பின்னாளில் சட்டவாதம் முன்வைக்கப்படலாம்.

இந்த வாதத்தோடு, ‘பயங்கரவாதம்’ என அர்த்தப்படுத்த முடியாத விடயத்துக்கு அந்தச் சட்டத்தைப் பிரயோகித்தமை நீதி தொடர்பான முழுத் தவறு என்று சந்தேக நபர்களினால் பின்னாளில் சட்ட வாதம் முன் வைக்கப்படுமானால் முழு வழக்கு விசாரணையே பின்னடைவைச் சந்தித்து, குற்றமிழைத்தவர்கள் தப்பவும் வாய்ப்பு ஏற்பட்டு விடலாம்.

வெறுமனே, சட்ட முரணான – சமூகப் பிறழ்வான – அநீதி மற்றும் அநாகரிகச் செயலாக – மட்டும் புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான வன்புணர்வு மற்றும் படுகொலைக் கொடூரத்தையும் அது தொடர்பான வழக்கு விசாரணையும் நோக்குவதுடன் நாம் நின்றுவிட முடியாது.

அதற்கு அப்பாலும் இவ்வழக்கின் விசாரணைப் போக்கில் தொடர்புபட்டுள்ள நீதி, நியாயம், சமூகப் பார்வை, அரசியல் பரிமாணம் ஆகியவற்றையும் நாம் நோக்க வேண்டும்.

எனவே, இந்த வழக்கின் விடயத்தில், சம்பந்தப்பட்டுள்ள சட்டப் போக்குக் குறித்து தமிழர்களின் அரசியல் தலைமை நுணுக்கமாக நோக்கி, கூடி ஆராய்ந்து, சில வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *