மேலும்

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்

Kapila Gamini Hendawitharanaசிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவருடன் இணைந்து சட்டவிரோதமான வகையில் நிதியை திரட்டியதாக, டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் குகநாதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவர்களின் வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இருந்து மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பணத்தை, டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் குகநாதன், லக்சம்பேர்க்கில் உள்ள நிதி நிறுவனங்களில் முதலிட்டுள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆழமாக விசாரணை நடத்தி எதிர்வரும் ஜூலை 2ம் நாள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்த விதாரண, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகளின் மூளையாகச் செயற்பட்டவராவார்.

2009 மே 18ம் நாள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதிலும் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

ஆரம்பத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த இவர் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்.

மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த உடனேயே இவர் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணையில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் பற்றிய தகவல்களும் அம்பலமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *