மேலும்

லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து விடுக்கப்பட்ட கூட்டறிக்கை

ukஅண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியைப் பெறுவதற்கு, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளது.

லண்டனில் நேற்றுமுன்தினமும், நேற்றும் நடந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் தொடர்பான கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இந்தக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராகிம் இப்ராகிம், சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் சமாதானத்திற்கான ஆலோசகர் மார்டீன் சுஷேஞர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுக்களுக்குப் பின்னர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில்-

சிறிலங்காவில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் லண்டனில் நடத்தப்பட்ட இரண்டு நாள் பேச்சுக்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டார்.

இந்த பேச்சுக்களில் சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து சமூகத்தினரிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேவேளை, சிறிலங்காவில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் புலம்பெயர் அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், இடம் பெயர்ந்துள்ளவர்களின் தேவைகள், அரசியல் கைதிகளின் விடுதலை என்பன குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில், 2000இற்கும் அதிகமான  வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியுதவிகளை திரட்டும் நோக்கில் கொழும்பில் நடத்தப்படவுள்ள கூட்டங்களுக்கு சிறிலங்காவுக்கான வெளிநாட்டு தூதுவர்களை அழைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னைய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

புலம்பெயர் அமைப்புகள் தமது சக்தியை பயன்படுத்தி எவ்வாறான வழிகளில் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு உதவ முடியுமென்பது குறித்தும் இந்தப் பேச்சுக்களில் ஆராயப்பட்டதாகவும்,  குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *