மேலும்

20வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

ranil-parliament20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த யோசனையின்படி 125 உறுப்பினர்கள் தொகுதி வாரியாக நேரடியாகவும், 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும், 25 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவர்.

இதன்படி, தற்போதுள்ள 225 என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது.

இந்த யோசனைக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் ப.திகாம்பரம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினரின் நலன் கருதி, பல உறுப்பினர் தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் அதற்கு, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் எஸ்.பி. திசநாயக்க உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிறபான்மைக் கட்சிகளின் நலன் கருதி, இரட்டை வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தும் யோசனையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ப.திகாம்பரம் ஆகியோர் ஆதரவளித்தனர்.

ஆனால், பெரும்பாலான அமைச்சர்கள் அந்த முறை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நிராகரித்து விட்டனர்.

இதனால் அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் தலையிட்ட சிறிலங்கா அதிபர், எந்தவொரு தரப்புக்கும் அநீதி ஏற்படாதவாறு தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்..

தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றுவதற்கு யாரும் தடையாக இருக்க வேண்டாம் என்றும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதையடுத்து, தேர்தல் முறை மாற்றத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், அமைச்சர் திகாம்பரத்தை சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தேர்தல் முறை மாற்றம் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரச சட்டவரைஞர் அனுர சாந்த டி சில்வா, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நான்கு நாட்களுக்குள் இந்த புதிய சட்டவரைவு தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் உடனடியாக சமர்ப்பிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *