மேலும்

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்பு செயலணி

CM-WIGNESWARANவடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, இந்த  செயலணியை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாணம் போதைப்பொருள் பரிவர்த்தனை நிலையமாக மாறியிருப்பதாகவும், தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் போதைப்பொருள் வடபகுதி இளைஞர்களுக்கு மட்டுமன்றி தென்பகுதி இளைஞர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தவைர் டாக்டர் திலங்க சமரசிங்க கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறவில்லை. ஆயுதமோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மிக வேகமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் 17 முக்கிய புள்ளிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் 07 பேர் தமிழர்கள். வடக்கு மாகாணத்திற்கு போதைப்பொருளை கொண்டு வருபவர்களும் தமிழர்கள் தான்.

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறப்பு காவல்துறை குழுவொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்துக்கு யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள 05 அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்படும்.

அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் போதைவஸ்து ஒழிப்பு குழுக்கள் நிறுவப்படும்.

மாதம் ஒருமுறை இந்த குழுக்கள் முதலமைச்சரின் தலைமையில் கூடி முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, மாதகல் பகுதி ஊடாக கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை தடுக்கவும், அவை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விற்கப்படுவதை தடுக்கவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலைகளின் முன்பாகவும் அருகிலும் விற்கப்படும் பொருட்கள், பாடசாலைகளுக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்களைச் சோதனையிடுமாறும், பாடசாலைகளுக்கு அருகே தேவையின்றி  நடமாடுவோரைக் கட்டுப்படுத்துமாறும், பெண்கள், மாணவிகளுக்குத் தொல்லை கொடுப்போரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *