மேலும்

மூத்த படை அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை

Gen. Jagath Jayasuriya- Lt. Col. Robert Ross (1)அமெரிக்க பயிற்சித் திட்டங்களில் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு, வாய்ப்பளிப்பது தொடர்பான கொள்கையை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்று, சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், லெப்.கேணல் ரொபேர்ட் ரொஸ்ஸிடம், சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த 1ம் நாள், அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் ரொஸ், சிறிலங்கா கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, சிறிலங்காவின் மூத்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கேட்டறிந்தார்.

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளிப்பது தொடர்பான தேவைகள் குறித்து அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

Gen. Jagath Jayasuriya- Lt. Col. Robert Ross (2)Gen. Jagath Jayasuriya- Lt. Col. Robert Ross (1)

முன்னதாக கடந்த மாதம் 24ம் நாள், அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் ரொஸ், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவையும் சந்தித்து, பயிற்சிநெறிகள், வடக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், 58வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க  இராணுவ போர்க்கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்ப முயன்ற போது, போர்க்குற்றச்சாட்டுகள், மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி அமெரிக்கா அவரை அனுமதிக்க மறுத்தது.

தற்போது அவர் இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார்.

அதுபோல, 53வது டிவிசனின் தளபதியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவையும், அமெரிக்கா பயிற்சியில் சேர்த்துக் கொள்ள மறுத்திருந்தது.

இந்தநிலையிலேயே, மூத்த படை அதிகாரிகளை பயிற்சிக்கு அனுமதிப்பது தொடர்பான அமெரிக்க கொள்கையை மீளாய்வு செய்யுமாறு சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *