மேலும்

சிங்களக் கல்வியாளரின் பார்வையில் சிறிலங்கா பிரதமரின் யாழ்ப்பாணப் பயணம்

Ranil-Jaffnaதேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையையும் அதன் முதலமைச்சரையும் ஓரங்கட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாட முடியும் என பிரதமர் கருதினால், இவர் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் விட்ட மோசமான அதே தவறுகளை மீண்டும் இழைக்கிறார்.

இவ்வாறு கல்வியாளர் ‘சுமணசிறி லியனகே’, கொழும்பு ரெலிகிராப் ஊடகத்தில், எழுதியுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

எனது தனிப்பட்ட கருத்தின் படி, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் பயணமானது நல்லாட்சி தொடர்பாக கணிசமான கேள்விகளை எழுப்பி நிற்கிறது.

காங்கேசன்துறை, மயிலிட்டி மற்றும் பலாலியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்களிடம் 425 ஏக்கர் நிலப்பரப்பை மீளக் கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகிய மூன்று தலைவர்களும்  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தமை தொடர்பில் நான் இங்கு சில விடயங்களைப் பதிவுசெய்கிறேன்.

30 ஆண்டுகளாக அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மேற்கொண்டதானது உண்மையில் பாராட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் மற்றும் சம்பூர் பிரதேசத்தில் கையகப்படுத்தப்பட்ட மீதிக் காணிகளும் எவ்வித தாமதமுமின்றி விரைவில் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கப்படும் என நாம் நம்புகிறோம். யாழ்ப்பாணத்தில் நில உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகளை மீளவும் ஒப்படைப்பதற்கான நிகழ்வில் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகிய மூவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது இவர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்காமை தொடர்பாக கொழும்பு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்படாததை நாங்கள் அவதானித்துள்ளோம்.

வடக்கு மாகாண முதலமைச்சரும் அவரது சபை உறுப்பினர்களும் பிரதமர் கலந்து கொண்ட சந்திப்புக்கள் மற்றும் நிகழ்வுகளில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சந்திப்புக்களில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அலுவலகத்தால் வடக்கு மாகாணசபைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? அல்லது ஒரு இந்தியத் தொலைக்காட்சி சேவை தொடர்பாக சிறிலங்காப் பிரதமரால் கூறப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை பிரதமரின் யாழ்ப்பாண வருகையை புறக்கணிப்புச் செய்யத் தீர்மானித்ததா?

பிரதமரின் யாழ்ப்பாண வருகை தொடர்பாக அனுப்பப்பட்ட அழைப்பிதழானது ‘சரியான முறையில் வழங்கப்படவில்லை’ என வடக்கு மாகாண சபை வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், ‘நான்’ யாழ்ப்பாண விடயம் தொடர்பாக விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடவில்லை. நான் பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடுகிறேன்’ என ஒரு சில வாரங்களின் முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று தான் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் போது வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடப் போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் சந்திப்பில் கலந்து கொண்டனர். பிரதமர் யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் மாவை சேனாதிராஜா, பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.

நல்லாட்சியின் அடிப்படைப் பண்பு தொடர்பாகவே, அன்றி பிரதமரின் அழைப்பிதழ் விவகாரம் தொடர்பாக ஆராய்வது இப்பத்தியின் நோக்கமால்ல.

ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை வடக்கில் நிலவும் மனிதாபிமானப் பிரச்சினையை முன்வைப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சரும் இச்சபையின் உறுப்பினர்களும் கருதி பிரதமரை அவமதித்திருக்கக் கூடாது என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்றும் இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கூற்றுக்களும், அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒட்டுமொத்த தவறான புரிந்துணர்வையும் ஆணவம் கொண்ட சிறிலங்கா அரசியல்வாதிகளினது மனப்பாங்குகுளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீளப்புனரமைக்கும் நோக்குடன் ‘வடக்கின் வசந்தம்’ என்கின்ற நிகழ்ச்சித் திட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் சில பலவீனங்களும் காணப்பட்டன.

எடுத்துக்காட்டாக, மிகப் பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதுடன், மிகச் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் திட்டங்கள் போன்றன புறக்கணிக்கப்பட்டன. மத்திய அரசாங்கத்தால் அமுல்படுத்துவதற்காக வரையப்பட்ட ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் அடிப்படைப் பின்னடைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

மனிதாபிமான விவகாரங்களை முன்னுரிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருந்தால், இதில் வடக்கு மாகாணசபையின் பங்களிப்பின்றி மேற்கொள்ள முடியுமா என்பதை பிரதமரும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் அறியவேண்டும்.

வடக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையையும் அதன் முதலமைச்சரையும் புறக்கணித்து, ஓரங்கட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாட முடியும் என பிரதமர் கருதினால், இவர் சிறிலங்காவின் முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விட்ட மோசமான அதே தவறுகளை மீண்டும் இழைக்கிறார் என்பதை என்னால் கூறமுடியும்.

யாழ்ப்பாணத்தில் பிரதமர் தங்கியிருந்த மூன்று நாட்களில் அவரால் ஆராயப்பட்ட விவகாரங்களில் பல ஏற்கனவே தீர்வு காணப்பட்ட அல்லது தீர்வுகாணப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாக உள்ளமை என்பதை இங்கு குறிப்பிடுவது மிகவும் பிரதானமானதாகும்.

கொலனித்து ஆட்சிக்காலத்திலும் கூட, வடக்கு மாகாணமானது எப்போதும் கொழும்புடன் சிறந்த உறவைப் பேணிவந்துள்ளது. ‘உயர் ஆணையாளர்கள் மற்றும் சிறப்புத் தூதுவர்களை தனது அலுவலத்திற்கு அல்லது வதிவிடத்திற்கு வரவேற்பது யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் கடமைகளில் ஒன்றாக இருந்தது.

நீண்ட காலமாக இந்த விடயமானது யாழ்ப்பாணத்தின் சிறப்பு அம்சமாகக் காணப்பட்டது. வேறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் சாதாரணமாக ஈடுபடுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு சிறப்பு அம்சமானது 1880களின் நடுப்பகுதியிலிருந்து அதாவது சிறிலங்கா அரசாங்கம் கூட தனது அலுவலகங்களுக்கு தூதுவர்களை வரவேற்காத அக்காலப்பகுதியிலிருந்து, தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்’ என யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரான  நெவில் ஜயவீர தனது நூலொன்றில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் நிலவும் நீண்டகால நல்லுறவு தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண அரசியற் சூழல் காரணமாக சிறிலங்கா பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு, யாழ்ப்பாண அரசாங்க அதிபர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களைத் தமது வதிவிடத்திற்கு அல்லது அலுவலகத்திற்கு வரவேற்கும் நடைமுறையைத் தடைசெய்தது என நான் நம்புகிறேன்’ என முன்னாள் அரசாங்க அதிபர் தனது நூலான Jaffna Exorcising The Past and Holding the Vision: An Autobiographical Reflection on the Ethnic Conflict இல் குறிப்பிட்டுள்ளார்.

சட்டங்களை விட வழக்காறு எப்போதும் பலமாக இருக்கின்றன. புதிய அரசியல் யாப்பு வரையறுக்கப்படும் வரை 13வது திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நன்றாக மதித்து அமுல்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் வாழ்வோர் கோருகின்றனர்.

சட்டங்களை மாற்றுவதன் மூலமும், திருத்தங்களை மேற்கொள்வதில் இழுபறிப்படுவதன் மூலமும் தனது அதிகாரத்தை மிகச்சாதாரணமாகப் பயன்படுத்துவதன் மூலமும் சிறிலங்கா அரசாங்கமானது எப்போதும் 13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

1980களின் பிற்பகுதியில் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கியதிலிருந்து வடக்கு மாகாண முதன்மை நிர்வாக அதிகாரியும் வடக்கு மாகாணச் செயலரும் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுகின்றனர்.

இதனையே ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கிற்கான தனது மூன்று நாள் பயணத்தின் போதும் பின்பற்றியுள்ளார். மேலாதிக்கம், ஆணவம் மற்றும் அதிகாரம் போன்றவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடைமுறையானது நாட்டில் நல்லாட்சி உருவாவதற்கு எவ்விதத்திலும் உதவாது.

வடக்கின் விவகாரங்களை ஆராய்வதற்கு தனது அலுவலகத்திலிருந்து சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவுள்ளதாக வடக்கிற்கான தனது பயணத்தின் இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதிகாரப் பகிர்வு ஏன் அவசியம்? என்கின்ற கேள்வியை இது உருவாக்குகிறது.

வடக்கை ஆட்சி செய்வதற்கான முதலமைச்சரின் நிர்வாகப் பொறிமுறை தொடர்பில் பிரதமரின் அலுவலகம் எத்தகைய சிறப்புத் தகைமையை மற்றும் இயலுமையைக் கொண்டுள்ளது?

Sumanasiri Liyanage – The writer is the Dean, Faculty of Management and Finance, SANASA Institute of Business and Development Studies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *