மேலும்

யாழ். போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலை தீக்கிரை

யாழ்ப்பாணம் – போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலை இன்று அதிகாலை தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

இங்கு  ஏற்பட்ட பாரிய தீ  சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிகாலையில் மருந்து களஞ்சியப் பகுதி திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியதை அவதானித்த மருத்துவனை பணியாளர்கள்  உடனடியாகத் தீயை அணைக்க முயற்சித்தனர்.

உடனடியாக யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர், சிறிலங்கா இராணுவத்தினர், விமானப் படையினர், காவல்துறையினர் மற்றும் மின்சார சபையினர் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மருந்து களஞ்சியசாலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலங்கள் மற்றும் மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ மிக வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  பெறுமதியான  பெருமளவு மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.

மருந்து களஞ்சியசாலைக் கட்டடமும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், களஞ்சியசாலையைச் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த களஞ்சியப் பகுதியில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட  குளிரூட்டப்பட்ட  அறையில் ஏற்பட்ட மின் கசிவே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே இந்த தீவிபத்தினால் மருத்துவமனைப் பணிகள் பாதிக்கப்படவில்லை என்றும், நோயாளர்களுக்கான மருந்து சிகிச்சைகள், மருந்துகள் வழங்குவதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *