மேலும்

புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை?

Puthukkudiyirippu-armsவிடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதுகுறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,

”அவன்ற் கார்ட் கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து, சட்ட விரோதமாக ஆயுத விற்பனை இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன என்று விசாரித்து வருகிறோம். அதிகாரபூர்வமற்றவர்களுக்கு அவர்கள் ஆயுதங்களை விற்றனரா என்று விசாரிக்கப்படுகிறது.

அவர்கள் நைஜீரிய அரசாங்கத்துடன் ஆயுத விற்பனை விவகாரங்களில் தொடர்பு வைத்திருந்துள்ளனர். அதேவேளை, நைஜீரியாவின் போகோ ஹராம் அமைப்புடனும் தொடர்பு வைத்திருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

நடுக்கடலில் ஆயுத விற்பனைகள் நடந்திருப்பதாக எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன.

அவன்ற் கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில், அவை அரசாங்கத்தின் ஆயுதங்கள் என்று கூறப்பட்டுள்ளன.

அந்த ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, இறுதிப் பாவனையாளர் என்ற உத்தரவாதச் சான்றிதழ் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினாலேயே வழங்கப்பட்டுள்ளது.

அவை அரசாங்கத்தின் ஆயுதங்கள் இல்லை என்றால், இவை அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன?

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவையே, வெளிநாட்டு அமைப்புகளுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் ஆயுதங்கள் விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தினால் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட உதயங்க வீரதுங்க உக்ரேனிய போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதுகுறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *