மேலும்

கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம் – கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பெற்றது கூட்டமைப்பு

EPCதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண அமைச்சர்களாக நான்கு பேர் பதவியேற்றனர்.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்,  தண்டாயுதபாணி, கல்வி அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு உறுப்பினரான, துரைராஜசிங்கம், விவசாய, நீர்ப்பாசன அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

சுகாதார அமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரும், வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவதி கலப்பதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இதுவரை கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்டிருந்த காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சுக்கள், வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு, ஆரியவதி கலப்பதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

EPC-cabinet

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், எம்.ஐ.எம். மன்சூர், வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தனர்.

இதையடுத்து, தமக்கு கல்வி மற்றும் காணி அமைச்சுக்களை எதிர்பார்த்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சரவையில் இணையும் முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டது.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆட்சியமைக்க ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்பது உறுப்பினர்கள், முதலமைச்சர் ஹபீஸ் நசீர் முகமத் தலைமையிலான அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்வதாக நேற்று அறிவித்திருந்தனர்.

அத்துடன், முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்தி அணியினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க தாம் ஆதரவு தருவதாகவும், முதலமைச்சர் பதவியை ஏற்குமாறும், அவர்கள் இரா. சம்பந்தனிடம் கோரியதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, கல்வியமைச்சராக நியமிக்கப்பட்ட, ஆரியவதி கலப்பதியிடம் இருந்து அந்த அமைச்சை மீளப்பெற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுத்தலைவர் தண்டாயுதபாணிக்கு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, புதிய அமைச்சர்கள் நால்வரும் இன்று பதவியேற்றுள்ளதுடன், எந்த நேரமும் கவிழலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணசபை அரசாங்கமும், ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது.

தற்போது, கிழக்கு மாகாண அரசாங்கத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *