மேலும்

மீண்டும் அரசியலுக்கு வருகிறார் மகிந்த – நுகேகொட கூட்டத்தில் சூளுரை

mahinda-rajapaksaகடந்த மாதம் அதிபர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குத் திரும்பப் போவதாக சூளுரைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரும், கூட்டம் ஒன்று விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோரின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நேற்றுமாலை நடத்தப்பட்டது.

பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் திரண்ட இந்தப் பாரிய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்ச பங்கேற்காவிடினும், அவர் அனுப்பிய செய்தியை, கலாநிதி தயான் ஜயத்திலக வாசித்தார்.

அந்தச் செய்தியில், ஆயிரக்கணக்கானோர் தான் மீண்டும் அரசியலுக்கு வருவதை விரும்புவதாகவும், அந்த விருப்பத்தை தன்னால் புறக்கணிக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அதிபர் தேர்தலில் தான் தோற்கடிக்கப்படவில்லை என்றும், அது ஒரு சூழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற, நாட்டுக்காக அர்ப்பணிப்போரின் எதிர்பார்ப்புகளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

mahinda-suport-nugegoda (1)

mahinda-suport-nugegoda (2)

mahinda-suport-nugegoda (3)

“தோல்வியை தோல்வியாக ஏற்க நான் எப்போதும் பின் நிற்பதில்லை.

அவமானம் என்பது என பழக்கமில்லாத ஒன்றல்ல. சிறையும் எனக்கு பழக்கமானது. மக்களுக்காக நான் அனைத்தையும் அனுபவித்தவன் என்பதை அனைவரும் அறிவர்.

பலர் தோல்விகளுக்கு பழகி இருந்தாலும், நேர்மையான தலைவருக்கு மாத்திரமே கௌரவமான வெற்றியின் உரிமையாளராக முடியும் என்பது எனது நம்பிக்கை.

நான் அந்த மகந்தான வெற்றியையும் அனுபவிக்க சந்தர்ப்பத்தை பெற்றவன்.

புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மரண அச்சத்தில் இருந்து காப்பாற்றினேன்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உலக ஆச்சரியம் கொள்ள செய்யும் வெற்றியை பெற முடிந்தது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

சிறந்த நோக்கங்களுடனான கூட்டணிக்கு மாத்திரமே நாட்டுக்கும், மக்களுக்கும் மீண்டும் அப்படியான வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும்.

அப்படியான வெற்றியான நோக்கை கொண்டுள்ள நுகேகொடையில் கூடியிருக்கும் மக்களின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறேன்.

தோல்வியடையாத எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போயிருந்தாலும் சகலரது படகும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே” என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *