மேலும்

புதுடெல்லிக்குப் புறப்பட்டார் மைத்திரிபால சிறிசேன

maithri-depature-india (1)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள்  அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யு.எல்.195 விமானத்தில், சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது மனைவி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் என 10 பேர் புதுடெல்லி சென்றுள்ளனர்.

இவர்கள் பயணிக்கும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் இன்று மாலை 5.10 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் சிறிலங்கா அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.

அதையடுத்து, இன்றிரவு ஓய்வெடுக்கும் மைத்திரிபால சிறிசேன நாளை காலையில் தொடர் சந்திப்புகளை ஆரம்பிப்பார்.

நாளை காலை 10 மணியளவில் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிறிலங்கா அதிபருக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்படும்.

maithri-depature-india (1)

maithri-depature-india (2)

அதையடுத்து, ராஜ்கார்ட்டுக்கு சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்துவார்.

இதையடுத்து. நாளை காலை 11 மணியளவில், ஐரிசி மயூரா விடுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

பின்னர், 12.15 மணியளவில், அவர், ஹைதராபாத் இல்லத்தில், நடைபெறும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பு மற்றும், அவருடனான சந்திப்பில் சிறிலங்கா அதிபர் பங்கேற்பார்.

இந்தப் பேச்சுக்களையடுத்து, இந்தியப் பிரதமரின் மதிய விருந்துடன் கூடிய, தூதுக்குழு மட்டச் சந்திப்பு நாளை பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும்.

நாளை பிற்பகல் 2.15 மணியளவில், உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்படும்.

நாளை இரவு 7.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இரவு 8 மணியளவில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இராப்போசன விருந்து அளிக்கப்படும்.

நாளை மறுநாள் 17ம் நாள், பிற்பகல் 1 மணியளவில் புத்தகயவுக்குப் புறப்பட்டுச் செல்லும் மைத்திரிபால சிறிசேன அங்கு வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மாலை 5 மணியளவில் திருப்பதிக்குப் புறப்பட்டுச் செல்வார்.

அன்றிரவு 7.40 மணியளவில் திருப்பதியை சென்றடையும், மைத்திரிபால சிறிசேன, மறுநாள் அதிகாலையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கொச்சின் விமான நிலையத்துக்கு செல்வார்.

வரும் 18ம் நாள் காலை 9.45 மணியளவில், கொச்சின் விமான நிலையம் வழியாக மைத்திரிபால சிறிசேன கொழும்புக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *