மேலும்

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் தரை – கடற்தோற்றத்தை மீளவடிவமைக்கும் சீனாவின் மூலோபாய நகர்வு

colombo-portcityஇந்திய மாக்கடலின் கரையோரம் முழுவதிலும் பாதுகாப்பான வலைப்பின்னலை உருவாக்கும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது தனது ஒப்புதலை வழங்கியதானது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.

இவ்வாறு foreignpolicy இணையத்தளத்தில், KEITH JOHNSON எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது பல பில்லியன் டொலர் பெறுமதியான சீனத் துறைமுகத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கான ஆதரவை வழங்குவதென அதிர்ச்சி தரவல்ல தீர்மானத்தை எட்டியதானது இப்பிராந்தியத்தில் நீண்ட காலமாகச் செல்வாக்குச் செலுத்தும் சீனாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

சீனாவின் அதிபர் மேற்குலக அயல் நாடுகளுடனான தொடர்பை விரிவுபடுத்துவதற்காக, இந்திய மாக்கடலின் கரையோரம் முழுவதிலும் பாதுகாப்பான வலைப்பின்னலை உருவாக்கும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது தனது ஒப்புதலை வழங்கியதானது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.

சிறிலங்காத் தீவின் மேற்குக் கரையோரத்தில் உள்ள கொழும்பில் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியில் துறைமுக நகரம் ஒன்றை உருவாக்குகின்ற சீனாவின் திட்டத்தைத் தடைசெய்வேன் என தேர்தல் பரப்புரையின் போது சிறிலங்காவின் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த போதும் தற்போது அவர் சீனத் திட்டத்திற்குத் தனது பச்சைக் கொடியைக் காண்பித்துள்ளதானது கடந்த வாரத்தின் பிரதான செய்தியாகக் காணப்பட்டது.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட போது அவரது தேர்தல் அறிக்கைகள் சீனாவிடமிருந்து சிறிலங்கா தனது உறவை விரிசலாக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருந்தது. அதாவது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணியிருந்தார்.

இதனை முறியடிப்பதற்காக மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் சீனாவுடனான உறவு விரிசலடையும் என்கின்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்த போது, கடந்த வாரம் சீனாவின் துறைமுக நகரத் திட்டத்திற்கு புதிய அரசாங்கம் தனது அனுமதியை வழங்கியதானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், புதிய அரசாங்க அதிகாரிகள் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டத்தால் ஏற்படவல்ல பாதுகாப்புப் பிரச்சனைகள் தொடர்பான தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான அதிருப்திக் கருத்துக்கள் வெளியிடப்பட்டு ஒரு சில வாரங்களில், சீனாவுடனான ‘தவறான புரிந்துணர்வைத்’ தவிர்க்கும் முகமாகவே சீனாவின் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு அதிபர் சிறிசேன தனது அனுமதியை வழங்கியுள்ளதாக அவரது அதிகாரிகள் நியாயப்படுத்தினர்.

சீனா தனது மேற்குலக அயல் நாடுகளுடன் பௌதீக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் ஆழமாக்குவதற்காக 40 பில்லியன் டொலர்கள் திட்டத்துடன் சீன அதிபர் தனது வெளியுறவுக் கோட்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே சிறிலங்காவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

சீனா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் புதிய வீதிகள் மற்றும் தொடருந்துப் பாதைகளை உருவாக்குதல் உள்ளடங்கலாக, சீனா தனது ‘புதிய பட்டுப் பாதைத்’ திட்டத்தை அமுலாக்குவதைத் தனது வெளியுறவுக் கோட்பாட்டின் மிக முக்கிய அம்சமாகப் பேணிவருகிறது.

இந்திய மாக்கடலில் வர்த்தக துறைமுக வசதிகளைக் கொண்ட வலைப்பின்னலை உருவாக்கி, சீனாவிற்கும் இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கும் இடையிலான புள்ளிகளை இணைத்து சீனாவின் ‘கரையோர பட்டுப் பாதைத்’ திட்டத்தை அமுலாக்குவதே இதன் பிறிதொரு பகுதியாகும்.

தனக்குத் தேவையான சக்தி வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் சீனா பெரிதும் தங்கியுள்ளது. இதன்காரணத்தால் இவ்வாறான கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தின் மூலம் தனக்குத் தேவையான கடற் பாதைகளைப் பாதுகாக்க வேண்டும் என சீனா கருதுகிறது.

2013ல் சீன அதிபர் இந்தோனேசியாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது கரையோரப் பட்டுப் பாதைத் திட்டம் தொடர்பான தனது எண்ணக்கருவை முன்வைத்திருந்தார். இதன்பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் இத்திட்டம் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அமுலாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்குலகிற்குச் சவாலாக இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனா தனது இருப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக சிறிலங்காவில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதானது இந்தியா போன்ற அயல்நாடுகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு சீன நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதியை அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் வழங்கியதானது இந்திய அரசாங்கத்தை வியப்பில் ஆழ்த்தியது.

சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்டமானது இந்திய உபகண்டத்தை சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென் சீனக் கடலில் நிலவிய சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா சில ஆண்டுகளைக் கழித்தது. இதன் காரணத்தாலேயே சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு, கொமோரஸ் மற்றும் செச்சல்ஸ் போன்ற நாடுகளில் சீனாவால் மேற்கொள்ளப்படும் அடிக்கட்டுமான முதலீடுகள் மற்றும் பொருளாதார, இராஜதந்திர, சாத்தியமான இராணுவத் தொடர்புகளை விரிவாக்குவதை அமெரிக்கா தற்போது உற்றுநோக்குகிறது.

‘நாங்கள் ஈடுபட வேண்டிய, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் நிச்சயமாக ஈடுபட வேண்டிய ‘கடல்சார் மிகப்பெரிய ஆட்டம்’ ஒன்று தற்போது இந்திய மாக்கடலில் மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் இந்த ஆட்டத்தை விரிவாக உற்றுநோக்க வேண்டும் என நான் கருதுகிறேன்’ என ஸ்ரன்போர்ட் பல்கலைக்கழகத்தின் கூவர் நிறுவகத்தில் (Stanford University’s Hoover Institution) தற்போது பணிபுரிபவரும் அமெரிக்கக் கடல்சார் நடவடிக்கைகளுக்கான முன்னாள் தலைமை அதிகாரியுமான அட்மிரல் கேரி றபீட் (Gary Roughead) குறிப்பிட்டுள்ளார்.

சீனாவைப் பொறுத்தளவில் கரையோரப் பட்டுப் பாதையானது பொருளாதார அபிவிருத்தித் திட்டமாகும். சீனாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் ‘பொது அபிவிருத்தி மற்றும் செழுமையைக்’ கொண்டு வருவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டே பட்டுப் பாதைத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக சீன அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய, நவீன துறைமுகங்களைக் கட்டுதல் மற்றும் ஏனைய கட்டுமானங்களை நிறுவுதல் போன்றன பிராந்தியம் முழுவதிலும் வர்த்தக சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதுடன் மட்டுமன்றி, பாரிய, குறுகிய கால பொருளாதார நடவடிக்கைகளை பட்டுப் பாதைத் திட்டம் மேற்கொள்ளப்படும் நாடுகளில் விரிவுபடுத்துவதையும் சீனா நோக்காகக் கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக புதிய முதலீட்டில் 13 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகிறது.

ஆனால் இவை அனைத்தும் வெறும் டொலர்கள் மற்றும் சதங்களை நோக்காகக் கொண்டதல்ல. கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்திற்கான முயற்சிகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனா தனது இருப்பைப் பலப்படுத்தவும், தென்கிழக்காசியாவில் பல ஆண்டு கால இறுக்கமான நெருக்கமான இராஜதந்திரத் தொடர்பின் பின்னர் தனக்கான நட்பு நாடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் வழிகோலுகிறது.

‘சீனாவின் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டமானது ஒரு மூலோபாயக் கூறாகும். அடிக்கட்டுமானத் திட்டங்களில் அரச ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கும், நட்பு வட்டார வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் உதவுகிறது’ என ஆசிய-பசுபிக் பாதுகாப்பு ஆய்வாளரான விர்ஜினியா மரன்ரிடோ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்திய மாக்கடலில் சீனாவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கு அப்பாற்பட்டது என புதுடில்லி மற்றும் வோசிங்ரன் கருதுகிறது.

இந்திய மாக்கடலில் சீனா ‘முத்துமாலை’ என்கின்ற மூலோபாயத்தைப் பயன்படுத்தி இப்பிராந்தியத்தின் கடல் ஆதிக்க சக்தியாகத் தன்னை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் சிலர் கடந்த பத்தாண்டாகத் தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பாதைகளில் சிறிலங்கா கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருப்பதாலேயே போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரான்சியர்கள் மற்றும் பிரித்தானியக் கடற்படையினர் கடந்த சில நூற்றாண்டாக சிறிலங்காவின் துறைமுகங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளனர்.

இந்த வரிசையில், தற்போது சிறிலங்காத் துறைமுக அபிவிருத்தியில் சீனா தனது முதலீட்டை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, கொழும்புத் துறைமுகத் திட்டமானது சீனாவின் கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபடும் ஆழமான கடற்கொள்கலன் தாங்கிகள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கேற்ப வடிவமைக்கப்படுகிறது.

இரு நாடுகளும் மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டால் இந்தியக் கரையோரத்திலிருந்து 150 மைல்கள் தொலைவிலுள்ள கடற்தளமானது மேலும் தீவிரமாகப் பாதிக்கப்படும்.

ஆனால் துறைமுகங்களில் சீனாவின் சரக்குக் கப்பல்கள் நிறுத்தப்படுவதற்கு அப்பால் இங்கு சீனக் கடற்படையின் நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதானது, வர்த்தக நோக்கத்திற்குப் பின்னால் சீனா தனது இராணுவத் தேவையை நிறைவு செய்வதையே முதன்மைப்படுத்துவதாகவும் சிறிலங்காவின் துறைமுகங்கள் சீனாவின் ‘இருவேறுபட்ட தேவைகளுக்காகப்’ பயன்படுத்தப்படுவதாகவும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனா அண்மைய ஆண்டுகளில் நவீன கடற்படையைக் கட்டியமைப்பதற்கான பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிற போதிலும் தனது நாட்டிலிருந்து தொலைவிலுள்ள நாடுகளில் இதனை விரிவுபடுத்துவதற்கான போதிய திறனை இன்னமும் பெறவில்லை.

அமெரிக்காவிற்கு உள்ள நட்பு நாட்டு கடற்தள வலைப்பின்னல்களைப் போல சீனா கொண்டிருக்கவில்லை. இதனால் சீனா தனக்கான கடற்தள வலைப்பின்னலை உருவாக்க வேண்டிய நிலையிலுள்ளது.

‘மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக இந்நாடுகளில் அடிக்கட்டுமான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதுடன் தனக்கான நட்பு நாடுகளைப் புதிதாகச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சியையும் மேற்கொள்கிற போதிலும் கிட்டிய எதிர்காலத்தில் முறைசார் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான திட்டங்களை சீனா தற்போது கொண்டிருக்கவில்லை’ என றபீட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல பில்லியன் டொலர்களில் திட்டங்களை மேற்கொள்வதாக சீனாவால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும் வழங்கப்படாத நிலையிலேயே கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை சீனா ஆரம்பித்தது என்பது நிச்சயமாகும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சுரங்கங்கள் மற்றும் மின்னாலைகளை அமைப்பதாக சீனா கடந்த பத்தாண்டாக வாக்குறுதி வழங்கிய போதிலும் இதனை அமுல்படுத்துவதில் காலதாமதமாகிறது. மியான்மாரில் சக்திவளத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் சீனா உடன்பட்ட போதிலும் இது இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.

சீன அரச ஆதரவு நிறுவனங்கள் மிகப் பாரிய முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்கின்ற போதிலும் பல்வேறு எதிர்விளைவுகளைச் சந்தித்துள்ளன.

ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் சீனாவால் முதலீடு என்ற பெயரில் நீட்டப்படும் நேசக்கரம் குறித்து அந்நாடுகள் தமது எதிர்ப்பைக் காண்பித்துள்ளன.

இதேபோன்று மியன்மாரில் சீனாவால் முதலிடப்பட்ட பாரிய அணைக்கட்டுத் திட்டமானது மியான்மாரின் தலைநகரான நைப்பியடோ மீதான சீனாவின் அதிகரித்த செல்வாக்கைக் கருத்திற்கொண்டு தடைப்பட்டது.

சீனாவால் பிற தீவுகளில் மேற்கொள்ளப்படும் பாரிய கட்டுமானத் திட்டங்கள் மறைமுகமான ஆழமான பிறிதொரு நோக்கத்தைக் கொண்டுள்ளதாக இந்திய மாக்கடல் பிராந்திய மற்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.

‘சீனாவால் மேற்கொள்ளப்படும் பரந்த மூலோபாய நகர்வானது ஆசியா மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் தரைத்தோற்றத்தையும், கடற்தோற்றத்தையும் மீளவடிவமைப்பதையும் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்மாணிப்பதையும் நோக்காகக் கொண்டது’ என றபீட் சுட்டிக்காட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *