மேலும்

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி

Indiaவடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

ஆனால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை அளவிடுவதற்கு முன்னரே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த இனப்படுகொலைத் தீர்மானம் ஜெனிவா கூட்டத்தொடரில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அதிகாரிகள் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானம், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லக் கூடும்.

இத்தகைய தீர்மானம் எதையும் நிறுத்துவதற்கு இந்தியா கவனம் செலுத்தும்.

வடக்கு மாகாணத்துக்கு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவின புதிய அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தரப்புக் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்தக் கட்டத்தில் அனைத்துலக இனப்படுகொலை விசாரணை குறித்து சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தைச் சவாலுக்குட்படுத்தும் எந்த முயற்சியும், சிக்கலான நிலையை ஏற்படுத்தக் கூடும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் போர்க்கற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது  என்ற தீர்மானமும் சமர்ப்பிக்கப்படக் கூடும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு இந்தியா எப்போதுமே எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது.

இந்த நிலைப்பாடு காரணமாக, 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கியது.

இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள பேச்சுக்களின் போது, நல்லிணக்கம் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளின் புனர்வாழ்வு என்பன முக்கியமான விவகாரங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தங்கியுள்ள ஒரு இலட்சம் அகதிகளைத் திருப்பி அனுப்பும் விடயத்தில், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் கலந்துரையாட இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *