மேலும்

வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

rajitha senaratneபோரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதுகுறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம், நிராகரித்துள்ளது.

ஒரு அரசு என்ற வகையில் இனப்படுகொலை ஒன்று சிறிலங்காவில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“இறுதிகட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள்.

அந்தச் சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது.

இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த முறை இதே தீர்மானம் மாகாணசபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார்?

இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது தான், இறுதிகட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரிழப்புகளுக்கு காரணம்.

போர் முடிந்த பிறகு, எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து என்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை.

இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வட மாகாண சபையின் தீர்மானத்தை மத்திய அரசு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *