மேலும்

வாக்குறுதியை காப்பாற்றவில்லை கோத்தா – கத்தோலிக்கத் திருச்சபை அதிருப்தி

pope-poset1பாப்பரசரின் படத்தை தேர்தல் பரப்புரைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி பயன்படுத்தி வருவது குறித்து கத்தோலிக்கத் திருச்சபை கடும் அதிருப்தியடைந்துள்ளது.

பாப்பரசரின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள், பதாதைகளை, அகற்றும்படி முன்னதாக கத்தோலிக்கத் திருச்சபை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருந்தது.

அத்துடன், அதிபர் தேர்தல் பரப்புரைக்கும் பாப்பரசரின் பயணத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், கத்தோலிக்கத் திருச்சபையின் வேண்டுகோளை ஏற்று பாப்பரசரின் படத்துடன் கூடிய பதாதைகள் அகற்றப்படவில்லை என்பதுடன், புதிதாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பாப்பரசரின் பயணத்துக்கான ஊடக மற்றும் தகவல் நிலைய பணிப்பாளர் வண.சிறில் காமினி,

“எமது வேண்டுகோள் போதும் என்று நினைக்கிறோம்.

இத்தகைய பரப்புரையுடன் தொடர்புடையவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தால், இதனை மதித்து நடப்பார்கள்.

நாம் அவர்கள் மிது நம்பிக்கை வைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, பாப்பரசரின் பயணத்தை அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

“அத்தகைய எல்லா சுவரொட்டிகளும அகற்றப்படும் என்று கடந்த மாதம் ஆயர்களைச் சந்தித்த போது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை.

பாப்பரசர் ஒரு ஆன்மிகத் தலைவர். அவரை அரசியல் பரப்புரைகளுக்குள் இழுக்கக்கூடாது.

நாளை ஆயர்களின் கூட்டம் நடைபெறும் போது, தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசரின் படம் பயனபடுத்தப்படுவது குறித்து தீவிரமாக பிரச்சினை எழுப்பப்படும்.

இதுதொடர்பாக நாம் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர் வரும் புதன்கிழமை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர், கர்தினால் மல்கம் ரஞ்சித், ஆயர்கள், ஏனைய ஒழுங்கமைப்புக் குழுக்களின் உறுப்பினர்களைச் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து கொள்வார்.

தேர்தல் பரப்புரைகள் குறித்து கத்தோலிக்கத் திருச்சபை அதிருப்தி கொண்டுள்ள போதும், பாப்பரசரின் பயணம் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *