அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி அரேபிய உயர்நீதிமன்றம்
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர்நீதிமன்றம், ரத்து செய்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், அவர் 2026 ஒக்டோபர் 11 ஆம் நாள் சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னின்று நடத்தியது; இதற்காக மேல்முறையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு சிறப்பு சட்டக் குழு சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தீர்ப்பு ரத்து செய்யப்பட்டதை சிறிலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முகநூல் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கும், எங்கள் தூதுவர், வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் சிறிலங்கா மற்றும் சவூதி சட்டக் குழுக்களின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதில் சவூதி அரேபியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அமீர் அஜ்வாத் முக்கிய பங்காற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
