மேலும்

தமிழீழத்தை வழங்குவதாக மேற்குலகுடன் எதிரணி இரகசிய உடன்பாடு – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

mahindananda-aluthgamageசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அல்ஜசீரா தொலைக்காட்சிக் கலந்துரையாடல் மூலம் அம்பலமாகியுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே,

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழீழத்தை பெற்றுக் கொடுப்பதாக ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் மேற்குலக நாடுகளுடன் இரகசிய உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளதை உரிய நேரத்தில் சான்றுகளுடன் உறுதிப்படுத்துவோம்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மேற்குலக நாடுகளே எதிரணியின் பொதுவேட்பாளரை தெரிவு செய்யுமென்பதனை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம்.

எதிரணி பொதுவேட்பாளர் சிறிலங்கா அதிபரானதும் ரணிலை பிரதமராக்க வேண்டுமென்பதும் இந்த நாடுகளுடனான உடன்பாடாகும்.

கடந்த 21ம் நாள் எதிரணியின் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் 20ம் நாள் இரவு அல்ஜசீரா தொலைக்காட்சியில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, ஹர்ச டி சில்வா மற்றும் உலகத் தமிழர் பேரவையின் செயலாளர் சுரேந்திரன் ஆகிய மூவரும் நேரடி நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தனர்.

அதில் புலம் பெயர்ந்தோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுரேந்திரன், எதிர்வரும் மார்ச் மாதத்தில் சிறிலங்கா அதிபரை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதால்,  அவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

எதிரணியினர் புலம்பெயர்ந்தோருடன் கூட்டு சேர்ந்து செயற்படுவதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

இலங்கையில் அமைதி தொடரக்கூடாது என்பதற்காக தமிழீழத்தை உருவாக்க மேற்குலக நாடுகள் சதித்திட்டம் திட்டியுள்ளன.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தை பெற்றுத் தருவதாக ரணிலும் சந்திரிகாவும் இங்குள்ள தூதரகங்களில் உடன்பாடுகளை கைச்சாத்திட்டுள்ளனர்.

இதைத் தவிர ரணிலுக்கு தெரியாமல் சந்திரிகாவும், சந்திரிகாவுக்கு தெரியாமல் ரணிலும், இவ்விருவருக்கும் தெரியாமல் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், இவர்களுக்கு தெரியாமல் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியனவும் ஒன்றுக்கு ஒன்று முரணான பல இரகசிய உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளன.

இவை அனைத்தையும் உரிய சந்தர்ப்பத்தில் சாட்சிகளுடன் நாம் உறுதிப்படுத்துவோம்.

ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர்  ஆட்சி முறைமையினை இல்லாது ஒழிப்பேன் என பெயரளவில் கூறிய போதும் அவரது உள்நோக்கம் தமிழீழத்தை வழங்குவதாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *