மேலும்

தோல்வியுற்றால் மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை – அல்ஜசீரா விவாதத்தில் கருத்து

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினால், போர்க்குற்றச்சாட்டுகளுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய முயற்சிகளுக்கான பணிப்பாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சாள்ஸ் டெய்லர், ஸ்லோபோடன் மிலோசெவிச் ஆகியோர், இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்காக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது போன்ற நிலையே மகிந்த ராஜபக்சவுக்கும் ஏற்படும்.

மகிந்த ராஜபக்சவும், சிறிலங்கா அரசாங்கமும் மனிதகுலத்துக்கு எதிரான மற்றும் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டும் அறிக்கை ஒன்று வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

போரில் கிட்டத்தட்ட 140,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களில் சிறுவர்களும், உடல் உறுப்புகளை இழந்தவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் அடங்கியுள்ளனர்.

போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதற்கான பெருமளவு ஆதாரங்கள் உள்ளன.

சில ஆதாரங்கள் அவருக்கு எதிராக இனப்படுகொலைக் குற்றச்சாட்டை முன்வைக்கத் தக்கவையாக உள்ளன.

எனினும், ஒரு அரசதலைவராக இருப்பதால், அவர் அனைத்துலகச் சட்டங்களில் இருந்து விலக்குப்பெற முடிகிறது.

அரசதலைவராக அவர் இல்லாது போனால், போர்க்குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும்.என்றும் அவர் தெரிவித்துளார்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

இறந்தவர்களின் புள்ளிவிபரங்களை ஐ.நா மிகைப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது தேர்தலில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், உலகத் தமிழர் பேரவை தேர்தலில் தலையிடாது என்று நம்புவதாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *