மேலும்

முதல் பலிக்கடா சசீந்திர ராஜபக்ச? – 4 மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்

cbk-maithripalaஅதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க எதிரணி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் நடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில், 3 ஆசனங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருந்தது ஆளும்கட்சி.

அங்கு முதலில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகன், சசீந்திர ராஜபக்சவே அங்கு முதலமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

அவரது ஆட்சியைக் கவிழ்த்து, ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டதாக பரப்புரை செய்யும் முயற்சிகளில் எதிரணி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் பெரியளவிலான கட்சித் தாவலைத் தொடர்ந்து மாகாணசபை மட்டத்திலும் கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஊவா, மேல், மத்திய மாகாணசபைகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, மாகாணசபை உறுப்பினர்களுக்கு உச்சக்கட்ட பேரம் பேசல்கள் நடப்பதாகவும், 10 மில்லியன் ரூபா தொடக்கம் 25 மில்லியன் ரூபா வரை இதற்கென குதிரை பேரம் இடம்பெறுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலக முடிவு செய்தால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியும் கவிழும் நிலை ஏற்படும்.

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து  கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *