மேலும்

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

hariharanதமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாறு International Law Journal of London ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் Dr Parasaran Rangarajan அவர்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலில் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கேள்வி: சிறிலங்காவிலிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஒருபோதும் இறங்கமாட்டாது என்பதை இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதிப்படுத்துகிறது. ஆனால் சிறிலங்காவில் தனித் தமிழீழத்தை உருவாக்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான இந்திய வெளியக புலனாய்வு அமைப்பின் (றோ அமைப்பு) ஊடாக 1980களில் இந்தியா ஆயுத உதவிகளை வழங்கியிருந்தது. இவ்வெவ்வேறுபட்ட முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்ட இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எத்தகையதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: 1987 யூலையில் இந்திய-சிறிலங்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சிறிலங்காவில் செயற்பட்ட ஆயுதக் குழுக்களுடன் இந்தியா எவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பது தொடர்பில் பல்வேறு தவறான தகவல்களும் குழப்பங்களும் நிலவுகின்றன என நான் கருதுகின்றேன். 1983ல் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரமானது பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுவதற்குக் காரணமாகியது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இக்கலவரமானது சிறிலங்காவில் ஆயுதக் குழுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. 1975ல் அகிம்சை வழிமூலம் சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] உருவாக்கப்பட்டு 1976ல் நடாத்தப்பட்ட தேர்தலில் இம்முன்னணி வெற்றியை ஈட்டியபோதிலும் இதனால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. சிறிலங்காவில் சுதந்திர தமிழீழத்தை அமைப்பதற்கான அரசியற் தீர்வொன்றை முன்வைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாய்ப்பை வழங்கவில்லை என்பது உண்மையே.

1983 கலவரத்தின் பின்னர், சிறிலங்கா வாழ் சிறுபான்மைத் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசாங்கம் மீது மிகப் பாரிய அழுத்தம் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்ததால் இந்தியா பனிப்போர்ச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தமிழ் மற்றும் சிறிலங்காத் தலைவர்களுக்கிடையில் திம்பு மற்றும் பங்களுரில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்காக திருமதி.இந்திராகாந்தி அந்நாட்டு ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு வழங்கினார். 1980களில், திருமதி இந்திராகாந்தியோ அல்லது அவருக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களோ சுதந்திர தமிழீழம் மலருவதற்கான ஆதரவை ஒருபோதும் வழங்கவில்லை.

ஏன் திருமதி இந்திரா காந்தி, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கினர் என்பது தொடர்பாக மே 23, 2011ல் நான் வழங்கிய நேர்காணலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன்: “ஒரு குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்ப்பதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான ஒரு சமரசத்திற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ள முடியும் என அக்காலப்பகுதியில் திருமதி இந்திரா காந்தி கருதினார்”

இந்திய அரசாங்கத்தின் கட்டளைகளைப் பின்பற்றி மாத்திரமே இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் பணிபுரிந்தன. ஆகவே இந்நிலையில், இவர்கள் தமிழீழத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கின எனக் கூறுவது முற்றிலும் தவறாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருவர் மாத்திரமே தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்கின்ற குறிக்கோளுடன் புலிகள் அமைப்பு வளர்க்கப்பட்டதே தவிர இது உண்மையில் இந்தியப் புலனாய்வாளர்களால் ஆதரவளிக்கப்படவில்லை.

கேள்வி: சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடாகும். பாதுகாப்புச் சபை சிறிலங்கா மீது தடை விதிக்காவிட்டால் இது ஐ.நா சாசனத்தை மீறுஞ்செயலாகவே நோக்கப்படும். நேற்றோ[NATO] அமைப்பு கொசோவாவில் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது போன்று, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்போது, தமிழ் மக்களுக்குத் தீர்வை எட்டக்கூடிய ‘பரிகார இறையாண்மையை’ சிறிலங்காவில் நிலைநிறுத்துவதற்காக எந்தவொரு சக்திகள் தலையீடு செய்யுமா? இவ்வாறு சிறிலங்காவில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதற்கு இந்தியா அனுமதிக்குமா? அல்லது ஆப்கானிலிருந்து நேற்றோ வெளியேறியது போன்று இவ்வாறான வெளிச்சக்திகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றுவது தொடர்பாகப் பரிசீலிக்குமா?

பதில்: நான் ஒரு சட்ட வல்லுனரல்ல. ஆனால் இந்த விவகாரத்தை மூலோபாய ரீதியாக நோக்க முடியும். இது எந்தவொரு குழப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அனைத்துலக சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்துலக நீதிமன்றம் கொசோவா மீதான தனது தீர்ப்பை 22 யூலை 2010ல் வெளியிட்டது. கொசோவா தனக்கான சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய போது மேற்குலக இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டது. ஆனால் நாடுகளின் இறையாண்மை மற்றும் அவற்றின் ஒன்றிணைந்த அடையாளமானது மிகவும் சாதாரணமாக வரையறுக்கப்பட முடியும் என நான் கருதுகிறேன்.

எந்தவொரு ஐ.நா உறுப்பு நாடுகளின் இராணுவத்தாலும் இழைக்கப்பட்ட குற்றங்களை அனைத்துலக நீதிமன்றுக்கு நிரூபிக்கக்கூடிய அதிகாரத்தை நேற்றோ NATO போன்ற எந்தவொரு இராணுவ அமைப்பும் கொண்டிருக்க முடியும் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச் சபை போன்றன கலந்துரையாடி சட்ட ரீதியாகக் கூட்டு நடவடிக்கையை எடுக்க முடியும். ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் இந்த அமைப்புக்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளன. ஏனெனில் இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயற்பட விரும்புவதில்லை.

பலம்பொருந்திய உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து கொசோவா பிரிந்து செல்வதை எதிர்த்துப் போர் புரியும் அதேவேளையில் மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி சர்வதிகார ஆட்சி நடாத்தப்படும் ஈராக் மற்றும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட சேர்பியா போன்ற நாடுகளில் வாழும் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு இதன்மூலம் ஐ.நா சாசனம் முற்றாக மீறப்படும் போது அதனை நியாயப்படுத்துவதற்காக 21வது நூற்றாண்டில் மேற்கொள்ளப்படும் ‘பரிகார இறையாண்மை’ போன்றன தொடர்பில் நான் திருப்தியடையவில்லை.

இந்நிலையில் ‘பரிகார இறையாண்மை’ என்பது அனைத்துலக ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு நாட்டில் வெளியக இராணுவத் தலையீட்டை மேற்கொள்வதற்கு கொசோவாவை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்த முடியாது. சொசோவாவில் ‘பரிகார இறையாண்மையை’ நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கிய பின்னர், பெப்ரவரி 19, பெப்ரவரி, 2008ல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், எந்தவொரு பிராந்தியத்தில் நிலவும் மோதலும் தனித்துவமானது எனவும், கொசோவா தான் பிரிந்து செல்வதைத் தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தி வெற்றி கொண்டதைப் போன்று எந்தவொரு நாடும் தமது சுதந்திரப் பிரகடனத்தைத் தாமாகவே மேற்கொள்வதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய அறிவிப்பானது இதன் அரசியல், இராஜதந்திர நாடகத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில் தென் ஒசேற்றியாவில் உள்ள ஆப்காசியா, ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து செல்லப்போவதாக அச்சுறுத்திய போது அதில் ரஸ்யா தலையீடு செய்ததையிட்டு அமெரிக்கா அதிருப்தியடைந்தது. அமெரிக்கா தொடர்பான இந்த எடுத்துக்காட்டானது ‘பரிகார இறையாண்மை’ தேவைப்படும் போது பயன்படுத்தப்பட முடியும் என்பதைக் குறிக்கிறது. அமெரிக்க வாத்திற்கு எது நல்லதோ அது ரஸ்ய வாத்திற்குப் பிடிக்காது என்கின்ற ஒரு பழமொழி உண்டு.

தற்போது சிறிலங்காவில் வேற்று நாட்டு இராணுவத்தின் தலையீடுகள் காணப்படவில்லை. சிறிலங்கா மீது தற்போதும் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்கிறது. மிக முக்கிய மற்றும் பிராந்திய பொறுப்பைக் கொண்டுள்ள இந்தியாவுடன் யுத்தத்தில் ஈடுபடாத சிறிலங்காவில் இந்தியா இராணுவத் தலையீட்டைச் செய்வதற்கான எவ்வித நியாயமான காரணங்களும் தற்போது காணப்படவில்லை.

1987ல் கூட, தமிழ் மக்களுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தமிழ் ஆயுத அமைப்புக்களை நிராயுதபாணிகளாக்கி அதன்மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் அவாக்களை ஒன்றிணைந்த சிறிலங்காவுக்குள் நிறைவேற்றுவதற்கான இரு தரப்புப் பேச்சுக்களை நடாத்துவதற்கு உதவுமாறு இந்தியாவிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தமைக்கு அமைவாகவே சிறிலங்காவுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறிலங்கா இராணுவம் தனக்கெதிராகச் சதி செய்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவே அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தனா இந்தியப் படைகளை சிறிலங்காவுக்கு அழைத்ததாக நம்பப்படுகிறது.

கேள்வி: அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியம் தொடர்பாக அறிவித்தல் விடுத்திருந்தன. இதற்கும் மேலாக, சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தைக் குறைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை மற்றும் இந்திய அரசாங்கம் போன்றன அழைப்பு விடுத்து வருகின்றன. இதைவிட, நிறைவேற்று அதிபர் முறைமை தொடர்பாக விதந்துரைக்கப்படும் 18ம் திருத்தச்சட்டத்தை நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இவ்விரு நகர்வுகளும் 1987ல் உருவாக்கப்பட்ட இந்திய-சிறிலங்கா கூட்டு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு-கிழக்கு இணைந்த ஆட்சி நடைபெற வழிவகுக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் என்பது சிறிலங்கா அரசியலில் நிரந்தரமாகப் பேசப்படும் ஒரு விவகாரமாகும். இந்த முறைமை ஐ.தே.க வால் உருவாக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பாக அதிபர் ராஜபக்ச, மத்தியில் அனைத்து அதிகாரங்கள் அதிபர் என்கின்ற தனிநபரின் கைகளில் குவித்து வைத்திருப்பதன் மூலம் தனது ஆட்சியில் மிகவும் இன்பம் கண்டுள்ளார். சிறிலங்காவில் இடம்பெறும் ஒவ்வொரு தேர்தலில் இந்த விவகாரம் பேசப்பட்டாலும், இது அரசியல் முன்னுரிமைகளிலிருந்து நீக்கப்படுவது வழமையானதாகும். இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடையாவிட்டால், இந்த நிலை மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை. நிகழ்காலத்தில் கூட இது இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.க வுடன் அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேரவுள்ளதாக அறிவிப்பதென்பது தேர்தற் காலத்தில் இடம்பெறும் வழமையான நிகழ்வாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் ஒன்றுசேர்வதன் மூலம் இவ்விரு வெவ்வேறு சமூகங்கள் சுமக்கும் வரலாற்றுச் சுமைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான தீர்வை எட்டமுடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.

நிறைவேற்று அதிபர் முறைமையுடன் தொடர்புபட்ட 18வது திருத்தச் சட்டம் எதிர்காலத்திலும் நடைமுறையிலிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா வாழ் மக்களிடமே உள்ளது. 2015 ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது இதற்கான வாய்ப்பை சிறிலங்கா வாழ் மக்களுக்கு வழங்குகிறது. சிறிலங்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது இந்தியாவையோ நாம் அதிகளவில் நம்பக்கூடாது.

எனது மதிப்பாய்வின் படி, வடக்குக் கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது. சிறிலங்கா உச்ச நீதிமன்றமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்து தனித்தனியாகச் செயற்படவேண்டும் எனக் கட்டளையிட்ட போது, இந்தியாவானது இந்த விடயத்தில் தலையிட்டு இவ்விரு மாகாணங்களையும் பிரிக்கக்கூடாது என அதிபர் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருக்க முடியும். ஆனால் அதனை இந்தியா செய்யவில்லை.

சிறிலங்காவுடன் சமாதானப் பேரம் பேசலை மேற்கொண்ட போது வே.பிரபாகரன் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகத் தீர்வெட்டுவதற்கான சில வரலாற்று ரீதியான வாய்ப்பைக் கொண்டிருந்தார். ஆனால் இவர் சுதந்திர தமிழீத்தை மட்டுமே கோரினார். வேறு எந்த விட்டுக் கொடுப்புக்களுக்கும் பிரபாகரன் உடன்படவில்லை.

சிறிலங்கா இராணுவம், வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ளதானது ஒரு அரசியற் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினை சிறிலங்கா அரசாங்கத்தாலும் வடக்கு மாகாண சபையாலும் தீர்க்கப்படவேண்டும். ஆனால் இவ்விரு தரப்புக்களுக்கும் இடையில் நீண்ட கால அரசியல் சார் நல்லுறவு பேணப்படுவது மிக அவசியமானதாகும். கெட்டவாய்ப்பாக, இவ்விரு தரப்புக்களுக்கும் இடையிலான சமரசப் பேச்சுக்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தோல்வியடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் சமரசத்தை மேற்கொண்டு மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெறுவதற்கான வழிவகையை மட்டுமே இந்தியா மேற்கொள்ள முடியும்.

கேள்வி: தனித் தமிழீழம் வேண்டுமென சிறிலங்காவிலுள்ள எந்தவொரு குழுவும் கோரிக்கை விடுத்தால், 1980களில் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்தியா பொருத்தமான பொறிமுறையின் ஊடாக இதற்கு ஆதரவளிக்குமா?

பதில்: இதற்கு முன்னர் பல தடவைகள் இது தொடர்பாக நான் பதிலளித்துள்ளேன். நீங்கள் ஒருபோதும் 1980 காலப்பகுதியை மீண்டுமொரு தடவை இந்தியாவிலோ அல்லது சிறிலங்காவிலோ உருவாக்க முடியாது. தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதற்கான எந்தவொரு அமைப்பும் சிறிலங்காவில் தற்போது இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இக்கோரிக்கையை முன்வைக்காது. புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள் மற்றும் தமிழ்நாட்டில் செயற்படும் சில குழுக்கள் போன்றன இவ்வாறான கோரிக்கையைத் தற்போது முன்வைக்கின்றன. இவற்றின் தமிழீழக் கோரிக்கையும் ‘கருத்தியல் மட்டத்திலேயே’ உள்ளது. இந்நிலையில் இன்னமும் எந்தவொரு அமைப்பும் தனித்தமிழீழம் தொடர்பில் நடைமுறை சார் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் இதற்கு இந்தியா எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

கேள்வி:  சிறிலங்காவில் செயற்படும் தீவிர பௌத்த அமைப்பான பொது பல சேனவைப் ‘பயங்கரவாதிகள்’ என வகைப்படுத்த முடியுமா அல்லது இதனை இந்தியாவால் தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் இணைக்க முடியுமா?

பதில்: சிறிலங்கா அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிறிலங்கர்களோ பொது பல சேனவை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுகிறார்களா? சிறிலங்கா காவற்துறை கூட பொது பல சேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் இது ஒரு வலதுசாரி சிங்கள அமைப்பாகவே நோக்கப்படுகிறது.  இவர்களது கருத்தியலின் படி, பொது பல சேனவின் நடவடிக்கைகள் தீவிரவாதச் செயற்பாடுகளாக வரையறுக்கப்படவில்லை.

எனது கருத்தின் படி, பொது பல சேன ஒரு பௌத்த அடிப்படைவாத அமைப்பாகும். அரசியலில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்காக இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இவர்கள் அரசாங்க ஆதரவுடன் செயற்படுகிறார்கள். இது ஒரு சட்ட விவகாரமாகும். இதனை மிகவும் உறுதியாகக் கையாளவேண்டும். தம்மைத் தாமே பௌத்தர்களின் மீட்பர்கள் எனக் கூறிக்கொண்டு செயற்படும் பொது பல சேனவுக்கு எதிராக எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்கள் முன்வராமைக்கு தமது செல்வாக்குக் குறைந்துவிடும் எனக் கருதுவதே காரணமாகும். இதனால் இந்த அமைப்பு வெளிப்படையாக சுதந்திரமாகச் செயற்படுகிறது. நாங்கள் பொது பல சேனவின் நடவடிக்கைகளைக் கொண்டு அதனை ‘தீவிரவாத அமைப்பு’ என வரையறுத்தால், இந்தியா மற்றும் சிறிலங்காவில் அரசியற் கட்சிகளின் கையாட்களாகச் செயற்படும் பல்வேறு அமைப்புக்களும் தீவிரவாத அமைப்புக்கள் என அழைக்கப்பட வேண்டும்.

பொது பல சேனவை இந்தியா ‘பயங்கரவாத’ அமைப்பு என முத்திரை குத்துமா என நீங்கள் வினவியது நகைச்சுவையானதே. ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென இந்தியா முத்திரை குத்துவதற்கு வரையறுத்த சில காரணங்கள் உள்ளன. தற்போது பொது பல சேன இந்தியாவில் செயற்படவில்லை. இந்தியா வாழ் முஸ்லீம் மக்கள் கூட, பொது பல சேனவைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை.

கேள்வி: தற்போது கருத்து வாக்கெடுப்பானது சாத்தியமில்லாவிட்டால், சிறிலங்காவின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வடக்கு கிழக்கு ஒன்றிணைக்கப்படும் போது அல்லது அதற்குப் பின்னர் இது சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்து வாக்கெடுப்பானது தமிழீழம் தொடர்பானதா அல்லது வடக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்படுவது தொடர்பானதா? அரசியல் நோக்கம் தவிர வேறெந்த சூழலில் யாரேனும் சிறிலங்காவில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட தனது அரசியற் கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரமே கருத்து வாக்கெடுப்பு என்கின்ற பதத்தைப் பயன்படுத்துகிறது. கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்படாமலேயே, நாடாளுமன்றில் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் வடக்குக் கிழக்கை சட்ட ரீதியாக இணைக்க முடியும். மறுபுறத்தே அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியப்படும்.

கேள்வி: செல்வாக்கு மிக்க நாடுகளின் உதவியுடன் அனைத்துலக ரீதியில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டால் இந்த அமைப்பிற்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா?

பதில்: இவ்வாறான ஒரு ஊகித்தல் வினாவுக்குப் பதிலளிப்பது கடினமாகும். நடைமுறையில் தமிழீழம் என்பதை அனைத்துலக சமூகம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அனைத்துலகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தமிழீழம் என்பது முதலில் தனக்கென நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்துலக சமூகம் அங்கீகாரம் வழங்கும் போது, ‘இந்த அமைப்பு’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பிற்கு ஆட்சி செய்தல் மற்றும் சுயாதீன அமைப்பு என்பதற்கு அப்பால் எவ்வித பங்களிப்பும் இருக்காது என்பதே எனது கருத்தாகும். (இந்த அமைப்பு என நீங்கள் தமிழ் பிரிவினைவாத அமைப்பையே குறிப்பிட்டுள்ளீர்கள் என நான் கருதுகிறேன்)

கேள்வி: இறுதியாக, தனித் தமிழீழத்தை எவ்வாறு அமைக்க முடியும் என்பது தொடர்பாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்று சார் குடியிருப்புக்களை ஆதாரப்படுத்தி அதற்காக ஆதரவு வழங்கிய ராஜீவ் காந்தி, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வன் மற்றும் பத்மநாபா போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் இரக்கமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்ட போது தனித்தமிழீழத்தை அமைப்பதற்கான அனைத்துலக வாய்ப்புக்கள் இழக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பின்னர், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து தமது பிரச்சினைகளை ஆராய்வதற்கான தக்க தருணம் இதுவாகும். பிரபாகரன் ஏன் தோற்றார் என்பதையும் ஆராய்ந்து அனைத்து தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றுசேர்ந்து ஒன்றிணைந்த சிறிலங்காவுக்குள் தமது அரசியல் அவாக்களைப் பெற்றுக் கொள்வதற்கான மூலோபாயக் கோட்பாட்டை வரையறுக்க வேண்டும். இதனை அடைவதற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானதாகும். கிட்டிய எதிர்காலத்தில் இது நடக்கும் என நான் நினைக்கவில்லை. பூகோளத்தின் இயங்குநிலை தொடர்பாக புதிய இளைய தமிழ்த் தலைமுறை ஆராயும் போதே இது சாத்தியமாகும் என நான் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *