மேலும்

அதிர்ச்சியில் கத்தோலிக்கத் திருச்சபை – வாக்குறுதியை மீறும் சிறிலங்கா அரசு

popeபாப்பரசரின் வருகையை அண்டி தேர்தல் நடத்தப்படாது என்று கத்தோலிக்கத் திருச்சபைக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாப்பரசரின் பயணத்தை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையையும் உதாசீனப்படுத்தி வருகிறது.

பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13ம் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை, சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி 8ம் நாள் நடத்தப்படவுள்ளது.

அதிபர் தேர்தலுக்கும் பாப்பரசரின் பயணத்துக்கும் இடையில் ஐந்து நாட்களே இடைவெளி உள்ளது.

தேர்தலுக்குப் பின்னர், அரசியல் ரீதியான குழப்பங்கள், வன்முறைகள் ஏற்பட்டால், அது பாப்பரசரின் பயணத்தைப் பாதிக்கும் என்று முன்னரே, கத்தோலிக்கத் திருச்சபை தரப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாப்பரசரின் வருகை, தேர்தலினால் பாதிக்கப்படாது என்றும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், சிறிலங்கா அரசாங்கம் வத்திக்கானிடம் உறுதியளித்திருந்தது.

இந்தநிலையில், பாப்பரசர் வருகையை அண்டி – அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, கத்தோலிக்கத் திருச்சபைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த கருத்து வெளியிட, கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்து விட்டார்.

அதேவேளை, பாப்பரசரின் பயணத்திட்டம் தொடர்பான ஊடக மற்றும் தகவல் பணியகத்தின் பேச்சாளர் வண.சிறில் காமினி இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில்,

“பாப்பரசரின் பயணத்தை அண்டி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் பயணத்துக்கு கொஞ்சம் முன்பாக, தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியளித்திருக்கும்.

ஏற்கனவே பாதுகாப்பு பற்றிய கவலைகள் உள்ளன. எம்மால் அதை நிராகரிக்க முடியாது.

ஆனால், ஆனால் நாம், சிறிலங்கா அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை முழுமையாக நம்புகிறோம்.

அதன்படி பாப்பரசரின் பயணத்துக்கான ஏற்பாடுகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கு முந்திய அல்லது பிந்திய வன்முறைகள் இடம்பெறும் என்று எவராலும் கூற முடியாது.

ஆனால் பாப்பரசரின் பயணத்துக்காக நாம் பிரார்த்திக்கிறோம். இந்தப் பயணம் சுமுகமாக இடம்பெற கடவுளை வேண்டுகிறோம்.

pope-poster

pope-poset1

எவ்வாறாயினும், பாப்பரசரின் பயணத்தை அரசியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று நாம் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

தேர்தல் அமைதியாக இடம்பெற பிரார்த்திக்கிறோம். ஆனால் எம்மால் எதையும் உறுதியாக கூற முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாப்பரசரின் பயணத்தை அரசியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கத்தோலிக்கத திருச்சபையின் கோரிக்கைகளை மீறி, சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டது.

சிறிலங்கா அதிபர் மற்றும் பாப்பரசரின் படங்களைத் தாங்கிய பதாகைகள், கத்தோலிக்க மக்கள் வாழும் பகுதிகளில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *