மேலும்

இலங்கை மீனவர்களை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? – இந்திய மனித உரிமை ஆர்வலர் கேள்வி

Avadhash Kaushalமரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்து விட்டு, அதே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களைத் தண்டனை அனுபவிக்க வைப்பது என்ன நியாயம் என்று இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌசல் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமற்போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட, அதிபர் ஆணைக்குழுவுக்கு, ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை ஆர்வலரான அவ்டாஸ் கௌசல், சிறிலங்கா அதிபரால், ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

அதேவேளை, அதே வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே வழக்கில் ஒரே தண்டனையை பெற்ற மீனவர்களில், ஒரு தரப்பினருக்கு விடுதலையும், ஒரு தரப்பினருக்கு, தூக்கும் அளிக்கப்படுவது என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் மரணதண்டனையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், இலங்கை மீனவர்கள் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று சிறிலங்கா நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சட்டத்தின் படி உள்ளூர் மீனவர்கள் தண்டனையை அனுபவிப்பர் என்று நீதி அமைச்சின் செயலர் கமலினி டி சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்களும், அரசியல்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *