ஒரு நாளில் 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குகிறது இந்தியா
இந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா உருவாக்கவுள்ள மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பினால், நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில், கடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், கடல்வழியான தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், இந்திய மிகப்பெரிய கண்காணிப்பு வலைமைப்பை உருவாக்கவுள்ளது.
இந்தியாவில் உள்ள 46 ரேடர்கள், சிறிலங்கா மற்றும் மாலைதீவில் உள்ள ரேடர்களையும், செய்மதிகளையும் ஒருங்கிணைத்து, இந்த பாரிய கண்காணிப்பு வலைமைப்பு உருவாக்கப்படுகிறது.
தகவல் முகாமைத்துவ ஆய்வு நிலையம் (Information Management and Analysis Centre (IMAC), என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காணிப்பு வலையமைப்பை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் நாளை குர்கானில் திறந்து வைக்கவுள்ளார்.
450 கோடி ரூபா செலவில் இந்தியா உருவாக்கியுள்ள, இந்த கண்காணிப்பு அமைப்பினால் நாளொன்றுக்கு, இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்யும், 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படையின் உதவித் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் கே.கே.பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில், 24 நாடுகளை ஒன்றிணைத்து, வணிக கப்பல்கள் பற்றிய தரவுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்வதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த கண்காணிப்பு அமைப்பும் செயற்படவுள்ளது.
கடல்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, எந்தெந்த நாடுகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்று நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவுள்ள இந்த தகவல் முகாமைத்துவ ஆய்வு நிலையத்தினால், தென்சீனக் கடல் வரையான பகுதி வரையில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.