மேலும்

ஐ.நா அறிக்கையின் காரம் குறைக்கப்படவில்லை – என்கிறார் மகிந்த ராஜபக்ச

Mahinda-Rajapaksaபோர்க்குற்ற நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கோ கிடையாது என்றும், எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா  மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, நேற்று அவர்  வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்குலக நாடுகளினால் வழங்கப்படுகின்ற நிதிகளின் மூலமாகவே இயங்குகினறது.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பெரும்பாலானவர்கள் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அதில் பணி புரியும் ஊழியர்களில் பாதிப்பேர் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்களே.

அத்துடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்ததும் மேற்குலக நாடுகள் தான்.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகி இருப்பதனால் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை காரம் குறைக்கப்பட்டுள்ளதாக பரப்புரை செய்யப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது, “இது மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை அல்ல அரசியல் ரீதியான பிரச்சினையே” என்று பாகிஸ்தான் பிரதிநிதி அக்ரம் தெரிவித்திருந்த கருத்து இந்த பரப்புரைகளினூடாக உறுதிப்படுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த அறிக்கை காரம் குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை.

போர்க்குற்ற நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக பரிந்துரை செய்வது தான் இவ்வாறான அறிக்கை மூலம் உச்சக்கட்டமாக செய்யக் கூடியதாகும்.

இந்த அறிக்கையில் அது பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர்களால் முடியுமான அளவு தூரம் வரை சென்றுள்ளனர் என்பது தெளிவாகிறது.

அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கோ கிடையாது.

போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐ.நா பாதுகாப்பு சபைக்கே உள்ளது.

எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *