மேலும்

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுகிறது இந்தியா

trincomalee oil farmதிருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு கடந்த 14ஆம் நாள் தொடக்கம் 16ஆம் நாள் வரை தாம் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக, நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார்.

“இந்திய- சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட சிறிலங்காவுக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்த உடன்பாட்டை செய்து கொள்வது குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டு மே அல்லது ஜுன் மாதம் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

எனினும், இந்தப் பயணத்தின் போது, விரிவான பொருளாதார பங்குடமை உடன்பாடு (சீபா) தொடர்பாக எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டதை, இந்திய அரரசாங்கம் வரவேற்றது.

சிறிலங்காவில் அரசியல் முட்டுக்கட்டைகளை நீக்கவும், எதிர்காலத்தில் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றவும்  தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவான மாற்றம் ஏற்பட்டுள்ளதை, அவர் வரவேற்றார்.

கூட்டு முயற்சி அடிப்படையில், திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை  அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் இந்திய நிறுவனங்கள் திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவவுள்ளது குறித்தும், அனல்மின் நிலையப் பணிகளை பூர்த்தி செய்வது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *