மேலும்

சிறையிலுள்ள பிக்குகள் காவியுடை அணிய இரண்டு வாரங்களுக்குள் அனுமதி

சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள், தங்கள் மத உடையுடன்  சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதை அனுமதிக்கும் வகையில், திருத்தப்பட்ட சிறைச்சாலை விதிமுறைகள் இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்யப்படும் என சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் நடைமுறைகள் குறித்து மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 8 ஆம் நாள்  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மூன்று முக்கிய பௌத்த பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

1877-ஆம் ஆண்டின் தற்போதைய சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திலோ அல்லது அதன் விதிமுறைகளிலோ பௌத்த பிக்குகளுக்கென தனியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

சிறைச்சாலை அதிகாரிகள் தற்போதைய சட்டக் கட்டமைப்பிற்கு உட்பட்டே செயற்பட்டனர், தனிநபர்களுக்காக சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குப் பதிலாக சட்டத்தைத் திருத்துவதன் மூலமே மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் விளக்கியிருந்தார்.

அதிபர் செயலகத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தின்போது, ​​ஒரு பிக்கு சிறைத்தண்டனை பெறுவது என்பது சங்கத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு உணர்வுபூர்வமான விடயம் என்று பௌத்த மதகுருமார்கள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்போது, ​​அது தொடர்பான பிரிவு அல்லது சபைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர்.

அதன்பின்னர், சம்பந்தப்பட்ட மத சபையின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அந்தப் பிக்குவை மத உடை அணிந்தவாறே சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லலாம்.

இத்தகைய நடைமுறையானது, முன்மொழியப்பட்ட சலுகை தவறாகப் பயன்படுத்தப்படாமல், அதேவேளையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பொருத்தமான வழியாக அமையும் என்று அவர்கள் கூறினர்.

முன்பு பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு பிக்கு பின்னர் வேறுபட்டதொரு சூழலில் காணப்படுவது போன்ற சம்பவங்கள், பௌத்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை சிறிலங்கா அதிபர்  ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமளிப்பதற்காகச் சட்டங்களை ஒதுக்கி வைக்க முடியாது என்றும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முறையான செயல்முறை மூலம் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் எந்தவொரு பிக்குவும் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடக்கூடாது என்று கூறிய சிறிலங்கா அதிபர், இதற்கான சட்ட விதிமுறைகளை விரைவாகத் தயாரித்து, இரண்டு வாரங்களுக்குள் அந்தச் செயல்முறையை நிறைவு செய்வதை உறுதி செய்யுமாறு நீதி அமைச்சருக்குப் பணித்தார்.

மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த முன்மொழிவு இச்செயல்முறையில் கூடுதல் தெளிவை வழங்கும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளை ஆய்வு செய்யவும், அதற்கான விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிக்கவும் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று பின்னர் நியமிக்கப்பட்டது.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனதீர இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனரத்ன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

சேனதீரவின் தலைமையில் அதிபர் செயலகத்தில் இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் ஒக்டோபர் 9 ஆம் நாள் நடைபெற்றது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இந்தக் குழுவின் பணிகளுக்கான கொள்கை வழிகாட்டல்களை வழங்கினார்.

இக்குழு தனது ஆய்வை நிறைவு செய்து, விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌத்த பிக்குகள் தொடர்பான முன்மொழியப்பட்ட விதிகள், அடுத்த வாரத்தின் நடுப்பகுதிக்குள் மகா சங்கத்தினரின் கருத்துக்களைப் பெறுவதற்காக அவர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்றும் சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *