மேலும்

சிறிலங்காவின் ஏற்றுமதி வருவாய் 20 பில்லியன் டொலர் இலக்கை எட்டாது

சிறிலங்கா இந்த ஆண்டு 18.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மங்கள விஜயசிங்க தெரிவித்தார்.

இது அபிவிருத்திச் சபை இந்த ஆண்டு நிர்ணயித்த 20 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற ஏற்றுமதி இலக்கை விட 7.5 சதவீதம் குறைவாகும்.

தேயிலை மற்றும் ஆடைத் துறைகளில் வெளிநாட்டு ஏற்றுமதி மந்தமடைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும்,  மங்கள விஜயசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 6 சதவீத  வளர்ச்சியைப் பதிவு செய்து, 15.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியுள்ளது.

எனினும், சிறிலங்கா அரசாங்கம் 2026-ஆம் ஆண்டில் 8 சதவீத வளர்ச்சியுடன் 20 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற இலக்கை அடையத் திட்டமிட்டிருந்தது.

தற்போது, ​​அனைத்துலக சந்தையில் ஆடை ஏற்றுமதித் துறைகளுக்கான தேவை குறைந்துள்ளதாலும், குறிப்பாக செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாலும், தேவை சரிந்துள்ளதாலும், ஆடைத் துறையில் ஒரு குறிப்பிட்ட பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மங்கள விஜயசிங்க குறிப்பிட்டார்.

ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுதான் ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணமாகிறது. இது ஒரு அம்சம்.

இரண்டாவது காரணி தேயிலை துறையிலும் தற்போது சுமார் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை சரிவு காணப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு நாங்கள்  18.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான ஏற்றுமதி வருவாயை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆண்டின் இறுதிக்குள் 20 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைய வேண்டுமானால்,நொவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் மட்டும் சுமார் 4.72 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட வேண்டியிருக்கும்.

இது வழக்கமான மாத ஏற்றுமதி அளவான 1.3 பில்லியன் முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட மிக அதிகம் ஆகும்.

ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டித் தரும் ஆடைத்துறை, அமெரிக்கச் சந்தையை பெருமளவில் (சுமார் 40%) சார்ந்துள்ளது.

அதேபோல், தேயிலை ஏற்றுமதியில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்களிப்பு (சுமார் 35%) மிக முக்கியமானது.

இவை இரண்டுமே 2026-ஆம் ஆண்டில் சரிவையும், தேவை குறைவையும் எதிர்கொண்டுள்ளன என்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைத் தலைவர்  மங்கள விஜயசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *