மேலும்

அதிக அடக்குமுறை கொண்டது புதிய சட்டமூலம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் அதிக அடக்குமுறை கொண்டது  என்று  முன்னிலை சோசலிசக் கட்சி  குற்றம் சாட்டியுள்ளது.

நுகேகொடவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இதுபற்றி விளக்கமளித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கான வரையறை மிகவும் பரந்ததாக இருப்பதால், எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்துவதற்கு இதனைப் பயன்படுத்த முடியும்.

கொலைகள், கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்துதல், கடத்தல் அல்லது பொதுமக்களிடையே அச்சத்தைப் பரப்பும் நோக்கம் கொண்ட செயல்கள் போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களை அடிப்படையாகக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ ஒன்றைச் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்தும் முயற்சிகளையே இந்த சட்டமூலம் பயங்கரவாதமாக  வரையறுக்கிறது.

இந்த சட்டமூலம் நீதித்துறையிடமிருந்து கணிசமான அதிகாரங்களை நிறைவேற்றுத்துறைக்கு மாற்றுவதுடன், காவல்துறையுடன் சேர்த்து ஆயுதப் படைகளுக்கும் கைது, விசாரணை மற்றும் தடுப்புக்காவல் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது.

அரசியல் பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும் விதிகளைத் தக்கவைத்துக் கொண்டோ அல்லது அறிமுகப்படுத்தியோ, இந்த சட்டமூலத்தை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றாகக் காட்ட அரசாங்கம் முற்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு வரைவு வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 28 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டமூலம், சில விதிகள் மாற்றியமைக்கப்பட்ட போதும், அதே வரைவுதான் இடம்பெற்றுள்ளது.

2023-ல் முந்தைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைப் போலவே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலமும்  உள்ளது.

அந்த சட்டமூலத்தை எதிர்த்து  தேசிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அப்போது அதனை எதிர்த்துவிட்டு, இப்போது அதே சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறது என்றால், அரசாங்கம் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு பரந்த மக்கள் இயக்கத்தை உருவாக்குமாறு தொழிற்சங்கங்களையும் பிற குழுக்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *