2027 முதல் காலாண்டு வரை பணவீக்கம் 8 வீதமாகவே நீடிக்கும்
சிறிலங்காவின் பணவீக்கம் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதியிலும் 2027-ஆம் ஆண்டின் முதற் காலாண்டு வரை, 8 சதவீதம் வரையிலேயே நீடிக்கும் என சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
2027-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குப் பின்னரே, பணவீக்கம் படிப்படியாக மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கித் திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ‘எல் நினோ’ நிகழ்வினால் ஏற்படக் கூடிய அபாயங்கள் உள்ளிட்ட மாறிவரும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாணயக் கொள்கைக் குழுவானது ‘ஓவர்நைட்’ கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதத்திலேயே தக்கவைத்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்காவின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது; அதேவேளையில், அண்மைய கொள்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தனியார் துறைக்கான கடன் வளர்ச்சியானது படிப்படியாகக் குறைந்துள்ளது.
அதிகரித்துள்ள பணவீக்கம் மற்றும் புதிதாகத் தோன்றும் பிற பொருளாதார அபாயங்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, தேவைக்கேற்ப நாணயக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும் என்றும் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.
அதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்க வீதம், 2026 செப்ரெம்பர் மாதத்தில் 8% ஆக நீடித்தது; இது 2026 ஓகஸ்ட் மாதத்தில் பதிவான அதே வீதமாகும்.
சனத் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்களின்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் முந்தைய மாதத்தில் 8.5% ஆக இருந்த நிலையில், செப்ரெம்பர் மாதத்தில் சற்று அதிகரித்து 8.7% ஆக உயர்ந்தது.
அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 7.7% என்ற அளவில் நிலையாக இருந்தது; இது 2026 ஓகஸ்ட் மாதத்தில் இருந்த அதே அளவாகும்.
