மேலும்

அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையில் இணைப்பு

அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், நேற்று மாலை இரத்மலான விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், இந்த உலங்குவானூர்திகள்  அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

சிறிலங்கா விமானப்படையின் விமானிகளின் பயிற்சித் திறன்களை மேம்படுத்தவும், அதன் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும் இந்த உலங்குவானூர்திகள்  கொடையாக வழங்கப்பட்டன.

இந்தநிகழ்வில், ​​சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசுபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த உலங்குவானூர்திகளைக் கையளிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்த விழாவில் சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர , பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த ,  மார்ஷல்  ஒவ் எயர்போர்ஸ் ரொஷன் குணதிலக மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான   உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், அமெரிக்க பதில் தூதுவர் ஜெயின் ஹோவல், மற்றும் பாதுகாப்புத் தூதுவர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுஸ் உள்ளிட்ட அமெரிக்க தூதரகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *