காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக நீதி கோரி, யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணிப் புதைகுழி அகழ்வை பார்வையிட சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும், காணாமல் போனோருக்கான பணியக அதிகாரிகள் வரவிருந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், அவர்களின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக நீதி வேண்டும் , புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் வேண்டாம், உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை போன்ற விடயங்களை வெளிப்படுத்தும் பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







