மேலும்

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டா ரிட் மனுத் தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப்பிரிவு தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர,  குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை  அவர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்  குறித்த சனல் 4 ஆவணப்படத்தில், அசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக, கோட்டை நீதிவான் நீதிமன்றம் தனக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த மனுவைத் தாக்கல் செய்வதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், குண்டுவெடிப்புகளுடன் தனக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து புலனாய்வாளர்கள் தன்னிடம் ஒருபோதும் விசாரணை நடத்தியதில்லை என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையாளர்களுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு முன்னிலையாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழோ தனது கைதுக்கோ அல்லது தடுப்புக்காவலுக்கோ சட்டப்பூர்வமான அடிப்படை ஏதுமில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் கூட, நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்றும் அவர் அந்த மனுவில் உறுதியளித்துள்ளார்.

நடைபெற்று வரும் விசாரணை பாரபட்சம் மற்றும் தீய நோக்க நடத்தையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, தன்னைக் கைது செய்யவோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கவோ செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் தன்னிச்சையானது, சட்டவிரோதமானது, நியாயமற்றது மற்றும் இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று  ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விசாரணைகள் முடிவடையும் வரை தனது சுதந்திரத்தைப் பாதுகாக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் அவர் நிவாரணம் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *