மேலும்

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்தில் அரசியல் தலையீடு?

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா, பதுளை உரிமையியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து, யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 22 ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் இந்த இடமாற்றம் நிகழ்ந்திருப்பது, வெளித் தலையீடு குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளதாக, யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது.

சில நீதிப் பேராணை மனுக்களில் வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக நீதிபதி அலெக்ஸ்ராஜா இடைக்கால உத்தரவுளைப் பிறப்பித்திருந்தார் என்றும், அதையடுத்து அரசாங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம், தலையீடு செய்யுமாறு ஆளுநர் கோரியிருந்தார் என தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும்,  சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற அதிகாரிகளின் விளக்கப்படாத மற்றும் திடீர் இடமாற்றங்கள் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சட்டத்தரணி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற செயல்பாடுகளில் தலையீடு நடப்பதாக ஏற்படும் மிகச்சிறிய சந்தேகம் கூட மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்,

இந்த விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்குமாறும் சிறிலங்கா அதிபரிடம் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமது கரிசனைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, சிறிலங்கா அதிபரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறும், யாழ். சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *