மேலும்

உலகளாவிய சூழல்களாலேயே சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

சிறிலங்கா  ரூபாவின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சி, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், உள்நாட்டு நிர்வாகக் குறைபாடுகளை விட உலகளாவிய சூழல்களாலேயே இது ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2022 மார்ச்-ஏப்ரலில், மற்ற பிராந்திய நாணயங்கள் நிலையாக இருந்தபோது, ​​முற்றிலும் உள்நாட்டுக் காரணிகளாலேயே, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 370 ரூபா வரை வீழ்ச்சியடைந்தது.

அது முற்றிலும் ஒரு உள்நாட்டு நிகழ்வு. அப்போது எந்த வெளிப்புற அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மற்ற நாணயங்கள் அந்தளவிற்கு மதிப்பு இழக்கவில்லை.

சிறிலங்கா நாணயத்திற்கு மட்டுமே உரிய மதிப்பிறக்கம். அது மிக வேகமாக மதிப்பிழந்தது.

இதற்கு மாறாக, தற்போது, உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்க டொலர் வலுப்பெற்று வருவதால், பிராந்திய நாணயங்களிலும் இதேபோன்ற சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியிடம் 700 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்தபோதிலும், இந்திய ரூபா அதன் வரலாற்றிலேயே மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணய முறையின் கீழ்,  சந்தையின் தேவை மற்றும் அளிப்பின் அடிப்படையில் நாணய மாற்று விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது..

நிலையற்ற தன்மையைக் குறைப்பதற்கும், கையிருப்பை உருவாக்குவதற்கும் மட்டுமே மத்திய வங்கி தலையிடுகிறது.

பிராந்திய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் எமது நாணயத்தின் சார்பு மதிப்பு வீழ்ச்சி இணக்கமான அடிப்படையில் உள்ளது. ஆனால் 2022-ல், மற்ற நாணயங்கள் மதிப்பு உயர்ந்தபோது, ​​எமது நாணயம் 45% மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

தேவைப்படும்போது ஏற்ற இறக்கங்களைச் சீர்செய்து, நாணயத்தை சந்தையே நிலைநிறுத்த மத்திய வங்கி அனுமதிப்பதால், இந்த கட்டமைப்பு மாற்றமின்றி தொடர்கிறது என்றும்,  சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர்  நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *