மேலும்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- நாளை இறுதியாகும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை நாளை இறுதி செய்யவுள்ளது.

பல மாதங்களாக நடைபெற்ற பொது ஆலோசனைகள், சட்ட ஆய்வு மற்றும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் மீதான  உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமர்சனங்களைக் கவனத்தில் கொண்டு இந்த வரைவு முன்வைக்கப்படவுள்ளது.

2025 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட  இந்த  சட்ட வரைவு, 1979-ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரைவு குறித்த பொது ஆலோசனைகளை சமர்ப்பிக்க பிப்ரவரி 28 ஆம் நாள் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆலோசனைக் காலம் முடிவடைந்த பின்னர், முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுத் தரப்பினரிடமிருந்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரைவில் உள்ள பல விதிகள் அனைத்துலக மனித உரிமைத் தரங்களுடன் முரண்படுவதாகப் பலர் எச்சரித்துள்ளனர்.

திருத்தப்பட்ட வரைவை நிறைவு செய்யும் இறுதிக் கட்டத்தில் குழு இருப்பதாகவும்,  சம்பந்தப்பட்ட தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த பின்னர் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கிய வரைவை இறுதி செய்வதற்காக, நாளை கூடவுள்ளதாகவும் இந்த ஆய்வு செயல்முறை குறித்து நன்கு அறிந்த  மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *