மேலும்

261 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

கோடை மழையைத் தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் ஆரம்பமாகி 12 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் பெய்த மழையை அடுத்து அகழ்வுப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. உடனடியாக நீர் அகற்றப்பட்ட போதும், தற்போது நீடிக்கும் மழையுடன் கூடிய வானிலையானால், நேற்று மதியத்துடன், அகழ்வு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வின் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு மனித எலும்புக்கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட  5 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 261 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதி ஒன்றின் மண்டையோடு பகுதி மாத்திரம் வெளியே தெரிந்த நிலையில், அது இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, 21 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி, நாணய குற்றிகள், ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *