126 சீனர்களை நாடு கடத்தியது சிறிலங்கா
நுழைவிசைவு விதிமீறல்களுக்காக கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட 126 சீனர்கள் நேற்று இரவு சிறிலங்காவில் இருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து வந்த ஒரு சிறப்பு விமானம் ஒன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் கடந்த மார்ச் 17ஆம் நாள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் குழுவில் 126 சீனர், மியான்மரைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் 4 தாய்வான் நாட்டவர்கள் அடங்கியிருந்தனர்.
இவர்கள் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் உள்ள பல விருந்தினர் விடுதிகளில் இருந்து செயற்படும் ஒரு பெரியளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகிறது.
இராணுவப் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த ஒரு இரகசியத் தகவலின் அடிப்படையில் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஐந்து இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
இந்தச் சோதனைகளின் போது, மடிகணினிகள், அலைபேசிகள் மற்றும் மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன.
எனினும், நுழைவிசைவு காலாவதியானதன் பின்னர் தங்கியிருந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே, கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றும் நாடு கடத்தப்பட்ட சீனர்களுடன் சிறப்பு விமானத்தில் சீனா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளியேற்றும் செயல்முறைக்கு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், உதவியளித்துள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்ட சீனர்களை வெளியேற்றுமாறு சீன அரசாங்கம் கோரியிருப்பதாக,பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
