தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்
 இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை, நல்லூர் கந்தன் ஆலயத்தின், வடகிழக்கு வீதியில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து, சாவைத் தழுவிய இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில், நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மருத்துவபீட மாணவர்களால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட முன்னாள் மாணவனான தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் – தீவகம் வேலணையிலும் இன்று தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு- கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் இன்று தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தியாகதீபம் திலீபனின் திரு உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து இன்று நல்லூர் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது.
இந்த ஊர்தி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்கள் வழியாக, பயணித்து எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரை வந்தடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.











