வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு
 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொடவை, நீக்குவதற்கு சட்டமா அதிபர் எடுத்த முடிவை செல்லுபடியற்றதாக அறிவிக்க வேண்டும் என்றுக் கோரி இந்த மனு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, நீண்ட பரிசீலனைக்குப் பின்னர், இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 30 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் இடம்பெறும்.
பின்னணி
2008 ஆம் ஆண்டு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் உட்பட 14 பேருக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இருப்பினும், ட்ரயல்-அட்-பார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவின் பெயரை நீக்க, சட்டமா அதிபர் முடிவு செய்தார்.
இந்த முடிவை எதிர்த்து, பெற்றோர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகொடவுக்கு எதிரான போதுமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே, அவரை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் முதலில் முடிவு செய்திருந்தார் என்றும், எனவே, அவரை வழக்கில் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
சட்டமா அதிபரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை சட்டத்தை மீறுவதால், தங்கள் பிள்ளைகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை சந்தேக நபர்களின் பட்டியலில் இருந்து நீக்கிய முடிவை செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரி, அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
