சிறிலங்காவில் இருந்து வெளியேறியது அவுஸ்ரேலிய நிறுவனம்
சிறிலங்காவின் எரிபொருள் சில்லறை சந்தையில் 2024 ஓகஸ்ட் மாதம், நுழைந்த அவுஸ்ரேலிய எரிசக்தி நிறுவனமான யுனைட்டெட் பெட்ரோலியம், நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.
எரிபொருள் விநியோகத் துறையை பன்முகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உத்திக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபன நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே இதனை உறுதிப்படுத்தினார்.
யுனைடெட் பெட்ரோலியம் மூன்று மாதங்களுக்கு முன்ன்னர் வெளியேறும் முடிவை முறையாக அறிவித்ததாகஅவர் கூறினார்.
நிறுவனம் செயற்பாட்டு நிலைமைகளில் அதிருப்தியைக் குறிப்பிட்டு, எதிர்பார்த்த இலாபத்தை அடைய சிறிலங்கா சந்தையின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாக தெரிவித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நிறுவனம் 2024 டிசம்பரில் அதன் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது.
யுனைடெட் பெட்ரோலியத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 64 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பின்னர் பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் அவுஸ்ரேலியாவைத் தாண்டி தனது முதல் வெளிநாட்டு சில்லறை வணிக முயற்சியை மேற்கொண்டிருந்தது.
முதலீட்டுச் சபையின், கட்டமைப்பின் கீழ் 20 ஆண்டு உரிமத்தைப் பெற்று, பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனைக்காக 27.5 மில்லியன் டொலர் நிதியை உறுதியளித்து, நாட்டிற்குள் நுழைந்தது .
அவுஸ்ரேலிய நிறுவனத்தின் விலகல் சிறிலங்காவின் எரிபொருள் சந்தையை தாராளமயமாக்கும் கொள்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
யுனைடெட் பெட்ரோலியம் வெளியேறியதால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே களத்தில் உள்ளன.
