மீண்டும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை
அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் வகை கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
நேற்று இந்தப் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
வேகம் மற்றும் பல்துறைத் திறனுக்காக கட்டமைக்கப்பட்ட இந்தப் போர்க்கப்பல், ஆழமற்ற நீர் மற்றும் திறந்த கடல் இரண்டிலும் இயங்கக் கூடியது.
இந்தக் கப்பல், கடந்த 2021ஆம் அண்டு சிறிலங்கா கடற்படையுடன் CARAT எனப்படும் கப்பல் தயார் நிலை பயிற்சி ஒத்துழைப்பு பயிற்சிக்காக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது.
இந்தோ- பசுபிக்கில் இயங்கும் இந்தப் போர்க்கப்பல், இந்த முறை எரிபொருள் மீள் விநியோகம் மற்றும் விநியோகத் தேவைகளுக்காக கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி யுஎஸ்எஸ் சான்டா பார்பரா (USS Santa Barbara) என்ற இன்டிபென்டன்ஸ் வகை கரையோர போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து, 22ஆம் திகதி வரை தரித்திருந்தது.