வோல்கர் டர்க் குற்றச்சாட்டுக்கு பதில் அறிக்கை தயாரிக்கும் சட்டமா அதிபர்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பதில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் முன்வைப்பதற்கான தனது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், நீதிக்கான ஒரு முக்கிய தடையாக சட்டமா அதிபர் திணைக்களத்தை அவர் விபரித்திருந்தார்.
அத்துடன், சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக பதிலளிக்கும் வகையில், சட்டமா அதிபர் திணைக்களம், அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சுடன், கலந்தாலோசித்து இந்த பதில் அறிக்கை தயாரிக்கப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 60வது அமர்வில், வோல்கர் டர்க் சமர்ப்பிக்கும், அறிக்கைக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பதிலின் ஒரு பகுதியாக இந்த அறிக்கையும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
