முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கு எதிராக மனு தாக்கல்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உரிமை ரத்து சட்டமூலத்திற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர், ரேணுகா பெரேரா, சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அதிபர்களின் உரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை கடந்த 7 ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருந்தது.
முன்மொழியப்பட்டுள்ள அந்த சட்டமூலத்தின், 01 முதல் 04 வரையான பிரிவுகள், அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகார வேறாக்க கொள்கையை மீறுவதாக உள்ளன என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் இறைமையை மீறுவதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம், அரசியலமைப்பின் முழு அடிப்படைக் கொள்கைகளுக்கும் எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சர்ச்சைக்குரிய விதிகளை, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும், பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற்றும் மட்டுமே நிறைவேற்ற முடியும் என தீர்ப்பளிக்குமாறும், மனுதாரர் கோரியுள்ளார்.