ட்ரம்பின் பொறி: தப்பிய மோடி – சிக்கிய அனுர
அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.
“மோடி யாருக்கும் பயப்படாத மனிதர். அவர் ஒரு கிங்மேக்கர். அவர் எனது நெருங்கிய நண்பர்…“ . மோடியை சமாதானப்படுத்த ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான போது, அமெரிக்காவுக்கு விரைந்த வெளிநாட்டுத் தலைவர்களில் மோடியும் ஒருவர். மோடி ட்ரம்பை சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ட்ரம்பின் புதிய துணை அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தார். துணை அதிபரின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்.
பிரான்சில், அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவிலும் மோடி கலந்து கொண்டார். பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இருவரும் மீண்டும் சந்தித்தனர்.
அமெரிக்க துணை அதிபரின் மகனின் பிறந்தநாள் விழா அங்கு நடைபெற்றது, மோடியும் அழைக்கப்பட்டார். பிறந்தநாள் விழாவில் மோடி மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்.
இந்த நேரத்தில்தான் ட்ரம்ப், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கத் தொடங்கினார்.
ட்ரம்ப் புதிய வரிக் கொள்கையை அறிவித்தவுடன், இந்திய பிரதிநிதிகள் வொஷிங்டனுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து வரி வீதத்தைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.
ட்ரம்ப் வரிக் கொள்கையை அறிவித்தவுடன் வேறு எந்த நாடும் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை.
மோடிக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான நெருங்கிய நட்பு காரணமாக, இந்தியாவின் மீது விதிக்கப்படும் வரி 12வீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
இந்தியாவுக்கு 12வீத வரி விதிக்கப்பட்டால், சிறிலங்காவில் உள்ள அமெரிக்க முதலீட்டாளர்கள், இந்தியாவுக்குச் செல்வார்கள் என்றும் சிறிலங்கா அஞ்சியது.
ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், ட்ரம்ப் முதலில் இந்தியாவுக்கு 25வீதம் வரி விதித்தார், தெற்காசியாவின் பிற நாடுகளுக்கான வரி வீதங்களைக் குறைத்தார். அது ஏன்…?
காரணம் இதுதான். அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் கால்நடைப் பொருட்களுக்கு இந்திய சந்தையைத் திறக்குமாறு, ட்ரம்ப் தனது நெருங்கிய நண்பர் மோடியிடம், கேட்டார்.
அமெரிக்க உணவுப் பொருட்கள் மற்றும் பால் பொருட்களுக்கு இந்திய சந்தை திறக்கப்பட்டால், இந்தியா மீது விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்தார்.
“அதை அனுமதிக்க முடியாது”என்பதே, ட்ரம்பிற்கு மோடி அளித்த தெளிவான பதில்.
அந்தப் பதிலைக் கொடுத்த பின்னர், அவர் வாரணாசிக்குச் சென்று ஒரு கூட்டத்தை நடத்தினார், அங்கு ட்ரம்பின் நட்பு மற்றும் ட்ரம்பின் வரிகளை விட, இந்தியாவின் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்கள் தனக்கு மிகவும் மதிப்புமிக்கவர்கள் என்று கூறினார்.
“நாங்கள் சுதேசி. எமது சுதேசி விவசாயிகள், பால் பண்ணையாளர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோரை நான் காட்டிக் கொடுக்க முடியாது“ என்று மோடி சத்தமாகச் சொன்ன போது, வாரணாசி மக்கள், காதுகள் வலிக்கும் வரை கைதட்டினர்.
மோடி சொன்னது சரிதான்.
ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அமைய, அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டால், இந்திய விவசாயிகளும் பால் பண்ணையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்திய சந்தை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறக்கப்பட்டால், இந்தியாவில் மோடியின் அரசியலும் முடிவுக்கு வரும் என்று, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கோட்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.
“நாங்கள் சுதேசிகள்”மோடி இதை முழு நாட்டிற்கும் உரக்கக் கூறினார்.
இந்தியா ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடு. இந்தியா, ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்கினால், வரியை மேலும் அதிகரிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார்.
ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், எண்ணெய் ஒப்பந்தத்தைத் தொடர இந்தியா முடிவு செய்தது.
ட்ரம்ப் இந்தியாவின் மீதான வரியை மேலும் 25வீதம் அதிகரித்தார்.
இந்தியாவுடன் ட்ரம்ப் கொண்டுள்ள மற்றொரு பிரச்சினை, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பு.
ட்ரம்ப் இந்தியாவை பிரிக்ஸ் அமைப்பிலிருந்து விலக கட்டாயப்படுத்தினார், இந்தியா இல்லை என்று கூறியது.
அமெரிக்காவை வலுவாக ஆதரிக்கும் ரணிலின் காலத்தில்தான், சிறிலங்கா பிரிக்ஸில் சேர விண்ணப்பித்தது.
அமெரிக்கா பிரிக்ஸை கடுமையாக எதிர்க்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தும், சிறிலங்காவை சேர்க்குமாறு, ரணில் மற்ற பிரிக்ஸ் நாடுகளை கேட்டுக்கொண்டார்.
2024 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸில் கலந்து கொள்ள ரணில் ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால், ரணில் தோற்கடிக்கப்பட்டார். அனுர அதிபரானார்.
சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் அனுரவை சந்தித்து, ரஷ்ய அதிபர் புடினின் சிறப்பு அழைப்பை வழங்கினார், சிறிலங்காவில் இப்போது ரஷ்யாவிற்கு விசுவாசமான ஒரு இடதுசாரி அதிபர் இருக்கிறார் என்று நினைத்தார்.
ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு வருமாறு புடின் அவரை அழைத்தார். அனுர அதைத் தவிர்த்தார்.
அமெரிக்காவை மகிழ்விக்க பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தவிர்த்தார். ஆனால் அமெரிக்காவை அப்படி திருப்திப்படுத்த முடியாது.
சிறிலங்கா மீது விதித்த 30வீத வரியைக் குறைக்க அமெரிக்கா பல நிபந்தனைகளை விதித்தது.
அந்த நிபந்தனைகளை வெளியிட முடியாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
“இடதுசாரி அரசாங்கம் சிறிலங்கா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று அர்த்தமா?“ தெளிவாகத் தெரியவில்லை.
வெளியிட முடியாத உடன்பாடுகள் சிறிது காலத்தில் வெளிவரும். ஏனென்றால் நீங்கள் ட்ரம்புடன் விளையாட முடியாது.
வரிச் சலுகைகள் வழங்கிய நாடுகள் ஒப்புக்கொண்டதற்கு, உடன்பாடுகளில் கையெழுத்திடாவிட்டால் வரியை இரட்டிப்பாக்குவதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
“அப்படியானால் மோடியின் அரசாங்கம் உள்நாட்டு அரசாங்கமாகவும், சிறிலங்காவில் இடதுசாரி அரசாங்கம் வெளிநாடாகவும் மாறுமா…?“
அதை எப்படி அழைப்பது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
றோகண விஜேவீர அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜேவிபியை கட்டியெழுப்பினார்.
வரி வீதத்தைக் குறைக்க, ஜேவிபி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட்டுள்ளது.
ட்ரம்பின் வரி ஒரு பொறி. நாட்டின் உள்ளூர் விவசாயத்தையும் தொழில்களையும் அழிக்கின்ற ஒரு பொறி.
இந்தியா அந்தப் பொறியில் இருந்து தப்பித்தது. சிறிலங்கா அதில் சிக்கிக் கொண்டது.
சிறிலங்காவில் இடதுசாரிகள், இப்போது அமெரிக்காவிற்கு ஒரு தூண்டில் ஆகிவிட்டனர்.
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ