எல்லைக் கிராமங்களில் செய்ய வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் என்ன?
வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான சேனைப்புலவில் வாழ்வாதாரம் தேவைப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு, மருத்துவர் உதயசீலன் கற்கண்டு பொறியியலாளர் மணிவண்ணன் தனுசன் ஆகியோர் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்போடு இணைந்து விவசாய தேவைக்கான கிணறு ஒன்றினை அமைத்துக் கொடுத்திருந்தனர்.
இதற்கான கோரிக்கை உள்ளிட்ட ஒழுங்குபடுத்தல்களை எல்லைக்கிராம செயற்பாட்டாளர் ரி ஜே தமிழ் செய்திருந்தார். எமது மக்களுக்கு தொடர்ந்தும் வாழ்வாதாரங்கள் மாத்திரம் வழங்கிக்கொண்டிருக்காமல் நிரந்தர தொழிற்முயற்சியாண்மை நோக்கி நகர்த்த வேண்டியதே இன்றுள்ள பிரதான தேவை.
அதையுணர்ந்து, களத்தில் இறங்கி காரியமாற்றிய மேற்குறித்த செயற்பாட்டாளர்களுக்கு ஈழத் தமிழுலகின் நன்றிகள்.
இந்தப் பதிவை எழுதத் தூண்டிய சம்பவம் இதுதான். சரி, விடயத்திற்கு வரலாம்.
எல்லைக்கிராமங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை அங்குள்ள பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்களுக்கூடாக செய்யப்பட வேண்டியவை.
ஆனால் பெரியளவில் வருமானம் தரக்கூடிய நிலையில் எல்லைக்கிராமங்கள் இல்லாதபடியால், பிரதேச சபையினால் அவற்றினை செய்யமுடியாது. ஆகவே தன்னார்வலர்களாக மக்கள் நலன்சார் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களிடமே அந்தப் பொறுப்பும் வந்து சேர்ந்திருக்கின்றது.
எல்லைக்கிராமங்களின் பிரதான சீவனோபாயமாக விவசாயமே காணப்படுகின்றது. விவசாயிகள் நாள் முழுதும் வெயில் – மழையில் குளித்து விளைவாக்கிய தம் உற்பத்திப் பொருட்களை அறாவிலைக்கே விற்கின்றனர்.
அன்றாட பொருளாதார தேவையும், தம் உற்பத்தி பொருட்களை இலகுவாக இலாபத்தோடு சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்புக்களின்மையும் அவர்கள் முன்னிற்பதால், வெளிமாவட்டங்களிலிருந்து வாகனங்களில் செல்லும் வியாபாரிகளுக்கே விற்கின்றனர்.
இதனால் உற்பத்திப்பொருளின் கொள்வனவு விலையை வியாபாரிகளே தீர்மானிக்கின்றனர். பலநேரங்களில் இந்தத் தரகர்கள் மனச்சாட்சியற்று நடந்து கொள்கின்றனர். தவித்த முயல் அடித்து விடுகின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உள்ளூர் வீதிகள் புனரமைக்கப்படல் வேண்டும். விவசாயிகளுக்கு இலாபம் தரக்கூடிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வவுனியா வடக்கினை பொறுத்தவரைக்கும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ள கிராமங்களின் உள்ளூர் வீதிகளின் தரத்திற்கு, தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழுகின்ற கிராமங்களின் உள்ளூர் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவில்லை.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலின் வவுனியா வடக்கு பிரதேச சபையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவருடன் உரையாடும்போது, மக்கள் சாராயத்திற்கு விலை போய் விட்டனர் என்றார். உண்மையும் அதுதான்.
குடிமோகம் வவுனியா வடக்கு மாத்திரமல்ல, வடக்கு முழுவதும் தலைவிரித்தாடும் பிரச்சினை. அந்தப் பிரச்சினையை எல்லைக்கிராமங்களில் கட்டுப்படுத்த வேண்டுமெனில், மக்களை, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை சாதாரண தரம் வரைக்குமாவது கல்விகற்க செய்யவேண்டும்.
துரதிஸ்டம் என்னவென்றால், வடக்கில் அதிகளவு பாடசாலைகள் மூடப்பட்ட பிரதேசமாக வவுனியா வடக்கு வலயம் காணப்படுகின்றமைதான். மாணவர்களுக்கு கல்வியைத் தரக்கூடிய மாலைநேரக் கற்றல் நிலையங்கள் அவசியப்படுகின்றன.
குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், மொழி, உள்ளிட்ட பாடங்களைப் போதிக்கும் கல்வி நிலையங்கள் அவசியப்படுகின்றன. அதேபோல கிராமத்திற்கு ஒரு வாசிகர்சாலையாவது அமைக்கப்படல் வேண்டும். நாளாந்த, வாராந்த பத்திரிகைள், புத்தகங்கள் வாசிக்க கூடிய சூழல் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏற்படுத்த வேண்டும்.
எல்லைக்கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் போருக்கு முன்பு வாசிகசாலைகள் பெரியளவில் இயங்கின. உதாரணத்திற்கு எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலை படுகொலை கூட வாசிகசாலையில் தான் இடம்பெற்றது.
போரோடு அனைத்து வாசிகசாலைகளும் கைவிடப்பட்டு விட்டன. மிஞ்சியவையும் பொதுநோக்கு மண்டபங்களாக மாற்றப்பட்டு விட்டன.
வவுனியா வடக்கின் இன்னொரு பொருளாதார ஈட்டம்தரும் தொழிலாக கால்நடை வளர்ப்பும் உள்ளது.
அனேகமான வீடுகள் இரண்டுக்கு மேற்பட்ட கால்நடைகள் இருக்கும். அண்மைக்காலமாக வாகனங்களில் வருகைதரும் இனந்தெரியாத நபர்கள் மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கால்நடைகள் உயிரோடும், இறைச்சியாகவும் திருடிச்செல்லப்படும் சம்வங்கள் அதிகரித்திருக்கின்றன. இது எல்லைக்கிராம மக்களின் பொருளாதார ஈட்டத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்படுகின்றது.
ஆகவே கால்நடைகளை சரியாகப் பாதுகாக்க மனமுவந்தவர்கள் வறிய கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கொட்டகைகளை அமைத்துக் கொடுக்க முன்வரலாம்.
யாழ்ப்பாணத்தில் எத்தனையோ சைவ ஆலயங்கள் சேரும் நிதியை செலவழிக்க வழிதேடும் நிலை காணப்படுகின்றது. அத்தகைய ஆலய தர்மகர்த்தா சபைகள் எல்லைக்கிராமங்களில் கால்நடைகளுக்கு கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கலாமல்லவா?
எல்லைக்கிராமங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் புதிய ஆலயங்களை அமைப்பதிலும், இருக்கின்ற ஆலயங்களை வருடந்தோறும் புதுப்பிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றோம்.
ஆனால் எல்லைக்கிராமங்களில் பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அவற்றினை, அந்த ஆலயங்களின் தோரணை மாறாது அமைக்க இங்கிருக்கின்ற சமய அமைப்புகள் உதவ முடியும்.
எவ்வித இந்தியமயமாக்கலும் இல்லாது, எல்லைக்கிராங்களுக்கே உரித்தான வழிபாட்டு மரபுகளை மீறாது கோயில்களைப் புனரமைப்பதே சிறந்தது.
இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அபிவிருத்திட்டங்கள் மிக அவசியமானவை.
அதிகளவான உணவு உற்பத்திப்பொருட்கள் எல்லைக்கிராமங்களில் உற்பத்தியாகின்றன. அவை உற்பத்திப் பொருளாகவே சந்தைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. அவற்றினை முடிவுப்பொருளாக மாற்றி அதிக இலாபத்தோடு சந்தைப்படுத்தும் தொழில் முறைகள் எல்லைக்கிராமங்களில் பெரியளவில் இல்லை.
எனவே குடிசைக் கைத்தொழில் அளவிற்காகவும், புதிய தொழில்களை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
அதேபோல நன்னீர் மீன்வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்றவற்றுக்கான வளங்களும் எல்லைக்கிராமங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே இதுபோன்ற தொழில் முயற்சியாண்மைகளுக்கும் உதவக்கூடியவர்கள் முன்வரலாம்.
இந்தப் பதிவைப் படித்த உங்களுக்கு, ஏன் எல்லைக்கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற கேள்வி வரலாம்.அதற்குரிய பதிலை பின்னர் எழுதுகின்றேன்.
-ஜெரா தம்பி