மேலும்

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுக்கு உத்தரவு

திருகோணமலை – சம்பூர் கடற்கரையில், மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட இடத்தில், அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க மூதூர் நீதிவான் தஸ்னீம் பெளஸான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனித எலும்பு எச்சங்கள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் மூதூர் நீதிவான் தலைமையில்,  நேற்று நடந்த கூட்டத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போதுது, சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட 3 மனித  எலும்பு எச்சங்கள் தொடர்பான அறிக்கையை சட்ட மருத்துவ அதிகாரி சமர்ப்பித்தார்.

அதன்படி,  ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது என்றும், மற்றையது, 25 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒருவருடையது என்றும், அடுத்தது 40க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவரினது என்றும்,  சட்ட மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், என்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணி அரச காணியாக உள்ளபோதும் அங்கு  மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று, தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிவான், அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள  உத்தரவிட்டார்.

கிழக்கு பிராந்திய சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதியின் ஆலோசனையைப் பெற்று, இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன், முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்றும் மூதூர் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *