மேலும்

இரணைதீவில் மீளக்குடியேற அனுமதியில்லை – சிறிலங்கா பிரதமர் திட்டவட்டம்

iranativuகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் மீண்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1990 – 92 காலப்பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழலினால், இரணைதீவில் குடியிருந்த 190 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேர் இடம்பெயர்ந்தனர்.

இவர்கள் மீளக் குடியேறுவதற்கும், இங்குள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தவும், மீனவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், இங்குள்ள தென்னந்தோட்டங்களின் உரிமையாளர்கள் அவற்றில் இருந்து பயனைப் பெறுவதற்கும் சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

iranativu

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

‘இந்திய மீனவர்களின் ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், முக்கியமானதொரு கேந்திரமாக இரணைதீவு விளங்குவதால் அங்கு பொதுமக்களை மீளக்குடியேற அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இங்கு கடற்படையினர் ரேடர் நிலையம் ஒன்றை அமைத்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

இரணைதீவு மக்கள், இந்தப் பகுதியில் மீளக்குடியேற அனுமதிக்கப்படாத போதிலும், தமது விவசாய, மதவழிபாடு மற்றும் மீன்பிடித் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தகைய செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டால், அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரை இதுபற்றிக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடன் இதுபற்றி்க் கலந்துரையாட முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *